'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருது செலவு 80 கோடி அல்ல, புது தகவல்

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்க கடந்தாண்டு வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.

இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. அந்த விருதைப் பெறுவதற்காக ராஜமவுலி தரப்பு சுமார் 80 கோடி செலவு செய்ததாகத் தகவல் வெளியானது. அது பற்றி பேசிய படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா, அதற்காக தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும் ராஜமவுலி செலவு செய்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜமவுலியின் மகன் கார்த்திகேய சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அந்த செலவு பற்றிப் பேசியுள்ளார். “ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா தரப்பில் 'ஆர்ஆர்ஆர்' தேர்வாகமல் போனது வருத்தமாக ஒன்று. அப்படி தேர்வாகியிருந்தால் ஆஸ்கர் விருது வெல்வது எளிதாக இருந்திருக்கும். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கலாம் எனச் சொல்வது மிகப் பெரிய ஜோக். 95 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது ஒரு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறதென்பது வரலாறு. ஆஸ்கர் விருது ஒவ்வொன்றிற்கும் ஒரு செயல்முறை இருக்கிறது.

ரசிகர்களின் அன்பை விலை கொடுத்து வாங்க முடியுமா ?, ஸ்டீவன் ஸ்பீர்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் பாராட்டுக்களை விலை கொடுத்து வாங்க முடியுமா ?. ஆஸ்கர் விருதுக்கான பரப்புரை செய்வதற்காக நாங்கள் 5 கோடி செலவு செய்ய திட்டமிட்டிருந்தோம். முதல் கட்டமாக இரண்டரை கோடி முதல் மூன்று கோடி வரை செலவு செய்தோம். நாமினேஷனுக்குத் தேர்வான பிறகு பட்ஜெட்டை உயர்த்தினோம். கடைசியாக 8.5 கோடி வரை செலவு செய்தோம்,” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.