ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 24-ம் தேதி முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில், ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளன. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கின்ற தனியார் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருகின்றது. இதில் பயின்ற மாணவர்கள் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறிப்பிட்ட ஒரு தேர்வு மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனெனில், கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தங்கள் தேர்வு மையத்திலிருந்து 2 ஆயிரம் பேர் தேர்வானது உண்மைதான் என்றும் உண்மையில் தேர்வான நபர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகம் என்றும் அந்த பயிற்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தேர்வான நபர்களின் பட்டியலை அளிக்கவும் தயார் என்றும் முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.