திருப்பதி டூ செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; இன்னும் 12 நாட்கள் மட்டுமே!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இதற்கு ’Train 18’ எனப் பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு தேசத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘Vande Bharat Express’ என மாற்றம் செய்யப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

உள்நாட்டு தயாரிப்பு

இதன் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. இதன் உட்புறப் பகுதிகள் சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் அதிநவீன அம்சங்கள் உடன் வடிவமைக்கப்பட்டது. 2019ஆம் பிப்ரவரி மாதம் புதுடெல்லி முதல் வாரணாசி இடையில் முதல் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது வரை 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அமலுக்கு வந்துள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

அதில் முதல் இரண்டு ரயில்கள் வந்தே பாரத் 1.0 எனவும், அடுத்த 8 ரயில்கள் வந்தே பாரத் 2.0 எனவும் அழைக்கப்படுகின்றன. அதாவது, சற்றே மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்திற்கு ஒரு ரயில் அடங்கும். சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. அடுத்ததாக ஏப்ரல் 8ஆம் தேதி முதல் சென்னை – கோவை இடையில் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.

செகந்திராபாத் டூ திருப்பதி

இதேநாளில் மற்றொரு முக்கியத்துவம் வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதாவது, ஆந்திர மாநிலத்தின் செகந்திரபாத் முதல் திருப்பதி வரை அதிவேக ரயில் சேவையை கொண்டு வரும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையில் கடந்த ஜனவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

2வது ரயில் சேவை

இந்த சூழலில் ஆந்திர மாநிலத்திற்கு இரண்டாவது வந்தே பாரத் ரயிலை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மொத்தமுள்ள 663 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கவுள்ளது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நகரமான திருப்பதிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

விரிவான விவரங்கள்

குறிப்பாக கோடை விடுமுறையை ஒட்டி லட்சக்கணக்கில் வந்து குவிவர். இந்த சூழலில் ஆந்திர மாநில பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய ரயில் சேவை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இது வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.

இடையில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும், பயணக் கட்டணம், நேர அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி கவுகாத்தி – நியூ ஜல்பைகுரி இடையில் 407 கிலோமீட்டர் தூரத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.