மாற்றி மாற்றி பேசுவது திமுக அமைச்சருக்கு அழகல்ல! ஆதாரத்துடன் அடித்து நொறுக்கும் சங்கம்! 

“சட்டப்பேரவையில் ஒரு புள்ளி விபரம், பொதுவெளியில் வேறொரு புள்ளி விவரங்களை பதிவு செய்வது அமைச்சருக்கு அழகல்ல.” என்று, பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2011-2021 பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் ஆவினில் நாளொன்றுக்கு சுமார் 24லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 41லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 30லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாகவும் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும் போது அத்துறை சார்ந்த அமைச்சருக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுக்கின்றனரா..? அல்லது சட்டப்பேரவையில் ஒரு புள்ளி விபர அறிக்கையை தாக்கல் செய்து விட்டு பொதுவெளியில் வேறொரு புள்ளி விபரத்தை பதிவு செய்யும் செலக்டிவ் அம்னீசியா வந்து தவித்துக் கொண்டிருக்கிறாரா..? பால்வளத்துறை அமைச்சர் நாசர் என தெரியவில்லை.

ஏனெனில் கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் இறுதி நிதியாண்டில் தமிழகம் முழுவதும் 17ஒன்றியங்களின் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 21.40லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் சுமார் 20.15லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை என்கிற அளவை தாண்டாத நிலையில் ஆட்சி மாற்றம் நடைபெற்று அதன் பிறகு முதல்வரான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் விவசாய பெருமக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் கொடுத்து பால் உற்பத்திக்கும், கொள்முதலிற்கும் மட்டுமின்றி ஆவின் பால் விற்பனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் படிப்படியாக உயர்ந்த பால் கொள்முதல் 25ஒன்றியங்களின் மூலம் 2020-2021நிதியாண்டில் நாளொன்றுக்கு சுமார் 35.90லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் சுமார் 24.37லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை வளர்ச்சி என்கிற அளவை எட்டியிருந்தது.

2021ல் தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 3.00ரூபாய் குறைக்கப்பட்ட பிறகு 2022-2023நிதியாண்டு நிலவரப்படி ஆவின் பால் விற்பனையானது நாளொன்றுக்கு சுமார் 26.41லட்சம் லிட்டர் மட்டுமே எனவும், பால் கொள்முதலானது 34.60லட்சம் லிட்டர் எனவும் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு நாசர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பால்மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிந்தைய மாதங்களில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதலானது கடுமையாக சரிவை சந்தித்து தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு சுமார் 24லட்சம் லிட்டர் முதல் 25லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் உண்மையான நிலவரத்தை மறைத்து பொய்யை மூட்டை, மூட்டையாக அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஆவினில் நடைபெற்ற பல்வேறு ஊழல், முறைகேடுகளில் கடந்த 22மாதங்களில் இதுவரை ஒன்றில் கூட முறையாக வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தான் நாட்களை கழிக்க வேண்டியதிருக்கும் என அந்த வார இதழ் நேர்காணலில் நாசர் அவர்கள் கூறியிருப்பது 2023ம் ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்றால் அது மிகையில்லை.

அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆவினுக்கான பால் வரத்து கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில் பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் அது இன்னும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு, காலதாமதம் என பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வரும் சூழலில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய துறை சார்ந்த பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினை அழிவின் பாதைக்கு கொண்டு செல்வதில் மட்டும் பெரு முனைப்பு காட்டி வரும் அமைச்சர் திரு நாசர் அவர்கள் “துறை ரீதியாக தான் வேகமாக செயல்பட்டு வருவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை”, அதனால் அமைச்சர் பொறுப்பில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்பதற்காக அவதூறுகளை பரப்புவதாக கூறியிருப்பது மிகப்பெரிய நகைப்பிற்குரியதாகும்” என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.