ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்: டெல்லி காந்தி நினைவிடத்தில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு

புதுடெல்லி: ராகுல் காந்தியை மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். குஜராத்தில் போராட வந்த காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் குடும்ப பெயரை, வெளிநாடு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் பெயருடன் ஒப்பிட்டு பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து ராகுலின் மக்களவை எம்பி பதவி பறிக்கப்பட்டது.

மோடி-அதானி உறவு குறித்து பேசியதால் பீதி அடைந்த பாஜ அரசு தன்னை தகுதி நீக்கம் செய்திருப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார்.  இந்நிலையில், ராகுலின் தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் காந்தி நினைவிடத்திற்கு வெளியே மேடை அமைத்து போராட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா மற்றும் குஜராத் போன்ற பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். குஜராத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தாஹோர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அமித் சாவ்தா மற்றும் மூத்த தலைவர்கள் கட்சித் தொண்டர்களுடன் அகமதாபாத்தில் உள்ள லால் தர்வாசாவில் போராட்டம் நடத்த வந்தபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் போலீஸ் ஸ்டேடியத்தில் அடைக்கப்பட்ட போது, அங்கு அவர்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜகட்சிக்கு எதிராக முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர். காஷ்மீரின் ஸ்ரீநகரில், முன்னாள் ஜேகேபிசிசி தலைவர் குலாம் அகமது மிர் தலைமையில் ஏராளமான கட்சி தொண்டர்கள் எம் ஏ சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் நடந்த இந்த சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பாஜ அரசை கடுமையாக சாடினர்.

* இனியும் அமைதியாக இருக்க மாட்டோம்
டெல்லியில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசுகையில், ‘‘தேச ஒற்றுமைக்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்த, நாட்டுக்காக தனது உயிரையே தியாகம் செய்த பிரதமரின் மகன் ஒருபோதும் நாட்டை அவமதிக்க முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். எனவே நாட்டின் ஜனநாயகத்திற்காக நாங்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம். ராகுல் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

இது நாட்டிற்கும் அதன் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. எனவே திமிர் பிடித்த பாஜ அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. எங்கள் குடும்பத்தை பிரதமர் மோடி எத்தனையோ முறை அவமதித்துள்ளார். இனியும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாட்டின் பிரதமர் ஒரு கோழை. அவர் தனது அதிகாரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். திமிர்பிடித்த மன்னனுக்கு மக்கள் பதிலடி கொடுப்பதுதான் இந்த நாட்டின் பாரம்பரியம். ஆனால், இந்த நாடு ஒரு திமிர் பிடித்த அரசனை அங்கீகரிக்கிறது. இந்த உண்மையை மக்கள் விரைவில் அறிவார்கள்’’ என்றார்.

* தப்பி ஓடியவர்களை விமர்சித்தால் உங்களுக்கு ஏன் வேதனை?
டெல்லி போராட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், ‘‘ராகுல் காந்தி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) அவமதித்ததாக குற்றம்சாட்டுகின்றனர். லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி இவர்கள் அனைவரும் ஓபிசி பிரிவினர். மக்கள் பணத்தை கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்கள். அவர்களை விமர்சித்தால் உங்களுக்கு (பாஜ) ஏன் வேதனை? எதற்காக தண்டிக்கிறீர்கள்? நாட்டை காப்பாற்ற பாடுபடுபவர்களை தண்டிக்கிறீர்கள், நாட்டை கொள்ளை அடிப்பவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறீர்கள்’’ என்றார்.  

* காந்திக்கு அவமதிப்பு: பாஜ
பாஜ செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேச தந்தை மகாத்மா காந்தி சமூக பிரச்னைக்காக சத்தியாகிரகத்தை நடத்தினார். ஆனால் காங்கிரஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக போராட்டத்தை சத்தியாகிரகம் என்கிறது. இது மகாத்மா காந்திக்கு செய்யும் அவமதிப்பு.  எதற்காக சத்தியாகிரகம்? நாட்டின் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் நீங்கள் அவமதித்ததை நியாயப்படுத்தவா, தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு எதிராகவா அல்லது தகுதி நீக்கம் செய்த விதிக்கு எதிராகவா? என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். இந்த போராட்டம் காங்கிரசின் ஆணவத்தை வெளிப்படுத்துகிறது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.