அதிகரிக்கும் கொரோனா: அடுத்த மாதம் 2 நாள்கள் மட்டும்.. முடிவை அறிவித்த ஒன்றிய அரசு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

கொரோனா மூன்று அலைகள் காரணமாக நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். உறவுகளை இழந்து தவித்தனர். கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். பல ஆண்டுகள் சேமிப்பு கரைந்து கடனாளிகளாக மாறினர். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னரே பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

உயிரை காப்பாற்றிய தடுப்பூசிகள்!

இரண்டு டோஸ் தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என பெரும்பான்மையானோர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட போதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று (மார்ச் 27) வெளியிடப்பட்ட ஒன்றிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் 1,805 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 134 நாட்களுக்குப் பிறகு 10,000-ஐத் தாண்டியுள்ளது.

பாதிப்பு அதிகரிப்பு!

நேற்று முன் தின நிலவரபடி புதியதாக 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பானது கடந்த 210 நாட்களில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாகும்.

இந்நிலையில் ஏப்ரல் 10, 11ஆம் தேதியில் கொரோனா தடுப்பு ஒத்திகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 19 முதல் 25 வரை 1,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு ஒத்திகை

ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. அதனால் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 10 மற்றும் 11ம் தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.