பல சாதனைகளைச் செய்த தமிழக வனத்துறையின் முதல் பெண் மோப்பநாய் `சிமி' உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறைக்கு, மத்தியப்பிரதேசம் போபாலில் இருந்து மோப்பநாய் ‘சிமி’ கடந்த 2015-ல் கொண்டு வரப்பட்டது.

இந்த மோப்பநாய் ‘சிமி’ மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல், வன மரங்களை திருட்டுத்தனமாக வெட்டி கடத்தும் கும்பல் மற்றும் வனப்பகுதியில் நடமாடும் நக்சல்களை கண்டுபிடிக்க வனத்துறைக்கு உதவியாக இருந்தது. 9 வயது நிறைவடைந்த நிலையில் பெண் மோப்ப நாய் ‘சிமி’ வயது முதிர்வின் காரணமாக நேற்று உயிரிழந்தது.

பயிற்சியில்… மோப்பநாய் `சிமி’

மோப்பநாய் சிமியை கடந்த 8 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பாளர் பெரியசாமி பயிற்சி அளித்து பராமரித்து வந்தார். வனப்பகுதி குற்றங்களை தடுக்க டெல்லியில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையிடம் தமிழகத்தில் முதல் முதலாக இந்த நாய் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ‘சிமி’ மோப்ப நாய், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றி திரிபவர்களிடம் கஞ்சா, மதுபானப்பாட்டில்கள், போதை பொருட்கள் இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனத்துறை குற்றங்களை தடுப்பது, சமூக விரோதிகளை ஊடுருவலை தடுப்பது, வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது போன்ற பணிகளில் மோப்பநாய் சிமி ஈடுபட்டு வந்தது.

கடந்த 2018 -ம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கில் யானை வேட்டையில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்கு ‘சிமி’ பெரும் உதவியாக இருந்தது.

ஒருமுறை சாப்டூர் மலைப்பகுதியில் ஒரு சிறுத்தைப் புலியை 5 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடியது. குற்றவாளிகளை எளிதில் மோப்பம் பிடித்து அவர்களை கைது செய்வதற்கு சிமி  பெரும் உதவியாக இருந்தது.

வனத்துறையில் மோப்பநாய் சிமியின் பணிகளை பாராட்டி, கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் மோப்பநாய் சிமி மற்றும் காப்பாளர் பெரியசாமிக்கு விருது வழங்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு இரவு சதுரகிரியில் கனமழை பெய்தபோது நீர்வரத்து ஓடைகளை கடக்க சிரமப்பட்டு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பக்தர்களை மீட்கும் பணியிலும் பக்தர்கள் சிக்கியிருக்கும் இடத்தை கண்டறிவதிலும் சிமி உதவியது.

மோப்பநாய் `சிமி’

இந்த சிமி நாயை பராமரிக்க மத்திய அரசு மாதம் ரூ. 10,000 வழங்கியது. ஒன்பது வயது ஆகும் ‘சிமி’க்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல் உபாதைகளும் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, கடந்த சில மாதங்களாக மோப்பநாய் சிமி வனத்துறை சார்ந்த எந்த பணிகளிலும் ஈடுபடுத்தப்படாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திலும் மோப்பநாய் சிமிக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், “தமிழக வனத்துறையின் முதல் மோப்ப நாயான ‘சிமி’ விரைவில் பணி ஓய்வு பெறலாம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பராமரிப்பாளரான பெரியசாமி, வழக்கம்போல நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டிற்கு செல்லும் முன் சிமிக்கு உணவு வைத்துவிட்டு சென்றுள்ளார்.

வனத்துறையினருடன் மோப்பநாய் `சிமி’

மறுநாள் காலை வந்து நாயை பார்த்தபோது மோப்ப நாய் சிமி பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு, மோப்பநாய் சிமியின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் சிமியின் உடல் வனத்துறை வளாகத்திலேயே உரிய மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக வனத்துறைக்கென்று முதல்முதலாக வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி, தனது பணியில் பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோப்பநாய் சிமி இறந்தது வனத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.