விருதுநகர்: டீக்கடைக்கு போன நேரத்தில் ரூ.70,000 திருட்டு… பதறிய விவசாயி; மீட்டுக்கொடுத்த போலீஸ்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்தவர் வேலு (வயது 64). விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நகை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடகில் உள்ளதாக தெரிகிறது. அந்த நகையை மீட்பதற்காக வேலு, தனது வீட்டிலிருந்து ரூபாய் 70 ஆயிரத்தை மஞ்சள் பையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

சிசிடிவி

அடகு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், வருடக்கணக்கு முடிவு காரணமாக நகையை தற்சமயம் திருப்ப முடியாது. எனவே, ஏப்ரல் 1-ம்தேதிக்கு பிறகு வந்து நகையை திருப்பிக்கொள்ளுங்கள் எனக்கூறியதாக தெரிகிறது. இதனால், அங்கிருந்து தனது டூவீலரில் கிளம்பிய வேலு, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள டீக்கடை முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு பணம் இருந்த மஞ்சள்பையை எடுக்காமல் வடைவாங்க சென்றதாக கூறப்படுகிறது.

அந்தசமயம், டீக்கடையில் வடை இல்லாததால் அடுத்தக்கணமே, டூவீலரை நிறுத்திய இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, டூவிலரில் தொங்கவிட்டிருந்த பணம் வைத்திருந்த மஞ்சள்பை திருடு போயிருப்பது கண்டு வேலு அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அப்பகுதியில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

பதுக்கல்

இதில், மர்மநபர் ஒருவர், வேலுவின் வாகனத்தில் தொங்கவிடப்பட்ட இருந்த பணப்பையை நைசாக திருடிக்கொண்டு தப்பியோடியது பதிவாகியிருந்தது. திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்த விசாரணையில் அவர், இராஜபாளையம் தாலுகா தளவாய்புரத்தை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி சரவணன்(51) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சரவணனை தேடி சென்ற போலீஸார், அவரைப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட சரவணனனிடமிருந்து பணம் மீட்கப்பட்டது.

சரவணன்

தொடர்ந்து, பணத்தை பறிக்கொடுத்தவரான விவசாயி வேலுவிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் பணத்தை திருடிய சரவணனை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.