`வைக்கம் போராட்ட நினைவுகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்!’ – கே.எஸ்.அழகிரி

கேரள மாநிலத்தில் தீண்டாமைக்கு எதிராக வைக்கம் என்ற இடத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதால் வைக்கம் வீரர் என்று பெரியார் அழைக்கப்பட்டார்.  வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு யாத்திரையாக ஈரோட்டிலிருந்து  கேரளத்துக்கு சென்ற வாகனப் பேரணியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தி.மு.க. சார்பில் அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்க, கேரள காங்கிரஸாரின் வாகனப் பேரணியை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்…

கேரளத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ வி.டி.பல்ராம், சி.சந்திரன், வழக்கறிஞர் பி.ஏ.சலீம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாகனப் பேரணி

பின்னர்,  தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளில் வைக்கம் புரட்சி முக்கியமானதாகும். அந்த போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக பெரியாரின் நினைவிடத்துக்கும், அவர் பிறந்த ஈரோட்டுக்கும் வந்து செல்ல கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி கேரளத்திலிருந்து கேரள காங்கிரஸ் சார்பில் பலராமன் தலைமையிலான குழு ஈரோடு வந்துள்ளது. வைக்கம் போராட்டத்தில் தமிழகத்துக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது என்ற அடிப்படையில் தமிழக அரசின் பிரதிநிதியாக அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். தமிழக காங்கிரஸ், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

வைக்கம் போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்தப் போராட்டத்தை கேரள காங்கிரஸ் தொடங்கும் போது கேரளத்தில் காங்கிரஸ் ஒரு சிறு இயக்கமாக இருந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தான் பெரிய வீச்சு ஏற்பட்டது. அதன்பிறகே அது ஒரு மக்கள் இயக்கப் போராட்டமாக வெடித்தது. இன்றும் பெரியார் என்று சொன்னால் நினைவுக்கு வரும் வார்த்தை வைக்கம் என்பது தான். ஏனென்றால் வைக்கம் போராட்டத்தை ஒரு தேசிய பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் முன்னெடுத்தவர் பெரியார்.  வைக்கம் போராட்டத்தின் தாக்கத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றார். காந்தியடிகளின் கவனத்தையும் ஈர்த்ததன் விளைவாக பல நூறு ஆண்டுகளாக அனுமதிக்கப்படாத ஒரு இடத்திற்குள் சென்று மக்கள் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது என்றால் அதற்கு பெரியாரின் போராட்டம் தான் முக்கிய காரணம்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் கேரள காங்கிரஸார்

தமிழகம் எப்போதும் சமூக சீர்திருத்தத்தின் பக்கத்தில் தான் நின்றிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தேசிய, திராவிட, பொதுஉடைமை இயக்கங்களாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற எந்த இயக்கமாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் சமூக விடுதலை, சமூக மேம்போக்கு, சமத்துவம், சமூக நீதி போன்றவற்றை நிலை நாட்டுவதில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் எப்போதும் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இங்குள்ள மக்களும் சமூக நீதியை நிலைநாட்ட எப்போதும் துணை நின்றுள்ளன. அந்த மாபெரும் முன்னோடிகள் எல்லோரும் கால் பதித்த இடம் ஈரோடு. அதனால் கேரள காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வைக்கம் போராட்டத்தின் நினைவுகளை மீண்டும் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் பணியை கேரள காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.