ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 04 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் தொடரின் போட்டியில் இலங்கை அணியினை ஆப்கானிஸ்தான் அணி 04 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியானது, அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதற்கமைய அபுதாபியின் டோலரன்ஸ் அரங்கில் நேற்று (28) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டம் சார்பில் 116 ஓட்டங்களையும், ஹாருன் கான் 56 ஓட்டங்களையும், சொஹில் கான் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதேவேளை இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக தினுர கலுப்பகன, விஷ்வ லஹிரு மற்றும் விஷ்வ ராஜபக்ஷ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தி இருந்தனர்.

இதன்பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 324 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்று 04 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் செவோன் டேனியல் 140 ஓட்டங்களையும், தினுர கலுப்பகன 47 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.

இந்த முக்கோண ஒருநாள் தொடரில் இப்போட்டியுடன் சேர்த்து மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் நாளை மறுதினம் 31 ஆம் திகதி தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.