புதுச்சேரி தலைமைச் செயலருக்கு எதிராக தீர்மானம்: எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்| Resolution against Puducherry Chief Secretary: MLAs insist

புதுச்சேரி: ‘தலைமைச் செயலருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ என, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

சட்டசபையில் நேற்று ஜீரோ நேரத்தில் நடந்த விவாதம்:
ஆறுமுகம்: பல்வேறு திட்டங்கள் தொடர்பாக நிறைய கோப்புகளை முதல்வர் அனுப்புகிறார். ஆனால், அவர் அனுப்பும் பல கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகிறது.

குறிப்பாக, தலைமைச் செயலர் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகிறது என கேள்விப்படுகிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். நிறைய கோப்புகள் திரும்பி வந்தால், மக்களுக்கு நல்லது செய்வது நின்று விடும். இதற்கு பி.சி.எஸ்., அதிகாரிகள் துணை போகிறார்களா? இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


லட்சுமிகாந்தன், பாஸ்கர்:
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாஜிம்: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் இதுதொடர்பாக பேசினேன். முதல்வர் அமைதியாக இருந்தார். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது என அவர் நினைக்கிறார்.
இது, மாநிலத்தின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்னை. தலைமைச் செயலரை கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும். அந்த தீர்மானத்தை நாங்கள் முன்மொழிகிறோம். முதல்வர் அனுப்பும் கோப்பை, அமைச்சர்கள் எடுக்கும் முடிவை சுற்றி விடுகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் சிவா:
மாநிலமாக இருந்தாலும் சரி, யூனியன் பிரதேசமாக இருந்தாலும் சரி சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. எனவே சபாநாயகரே நடவடிக்கை எடுக்கலாம். மக்களுக்கு எதிர்ப்பாகவும், நலத் திட்டங்களுக்கு எதிர்ப்பாகவும் நடந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதிகாரிகளின் செயல்பாடு தான்தோன்றித்தனமாக உள்ளது.
மக்களாட்சி தத்துவத்தை உணர்ந்து தலைமைச் செயலர் பணியாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும். கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

latest tamil news

நாஜிம்: ஜானகிராமன் முதல்வராக இருந்தபோது, இதுபோல செயல்பட்ட அதிகாரி குறித்து துணை பிரதமரிடம் கூறினோம்.
அன்றைய தினம் மாலையே அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். நீங்களும் நேரில் சென்று புகார் செய்யக் கூடாதா?
வைத்தியநாதன்: இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் பாதிக்கப்படுவர்.
சபாநாயகர் செல்வம்: முதல்வருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.