"வெற்றிக்கு கைகொடுத்த மூவர்" – எடப்பாடி சாதித்த பின்னணி

அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடுத்திருந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கவும் மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொறுப்பை ஏற்றதும், முதல் உத்தரவாக வரும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். பொதுச் செயலாளராக அவர் தேர்வானதைக் கொண்டாடும் வகையில், அ.தி.மு.க தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. “இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் தீர்ப்புக்கு முதல் நாள் இரவே திட்டமிடப்பட்டதுதான். எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வருமென்பதை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். இந்த வெற்றியில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரின் பங்கு முக்கியமானது” என்கிறார்கள் விவரமறிந்த அ.தி.மு.க சீனியர்கள்.

கொண்டாட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்

மார்ச் 28-ம் தேதி காலை 8 மணியிலிருந்தே எம்.ஜி.ஆர் மாளிகையில் அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் குழுமத் தொடங்கிவிட்டனர். சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடியின் இல்லத்திலும் தொண்டர்கள் கூட்டம் திரண்டது. உயர் நீதிமன்றத்திலிருந்து அப்டேட்களை உடனுக்குடன் எடப்பாடியின் இல்லத்திற்கு தருவதற்காக அ.தி.மு.க வழக்கறிஞர்கள் டீம் தயாராக இருந்தது. வழக்கம்போல கட்சி நிர்வாகிகளை எடப்பாடி சந்தித்துப் பேசி வந்த நிலையில்தான், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. தனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருப்பதை வழக்கறிஞர்கள் சொன்னதும், உற்சாக மூடுக்குச் சென்றிருக்கிறார் எடப்பாடி. அவர் வீட்டில் குழுமியிருந்த நிர்வாகிகள் லட்டு வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடினர். சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உடனடியாக பேரவையிலிருந்து புறப்பட்டு தலைமைக்கழகம் வந்தனர். எடப்பாடியும் தலைமைக்கழகம் வந்தடைந்தார்.

பூங்கொத்துகள், மாலைகள், பெரிய சைஸ் லட்டு, பட்டாசு சத்தம் என கலக்கலாக எடப்பாடியை வரவேற்றது அ.தி.மு.க பட்டாளம். தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் திரண்டிருந்த தொண்டர்கள் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அலுவலகத்திற்கு அவர் வந்தவுடன், அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை நத்தம் விஸ்வநாதனும் பொள்ளாச்சி ஜெயராமனும் வாசித்தார்கள். அதற்கான சான்றிதழைப் பெற எடப்பாடியை அவர்கள் அழைத்தபோது, “அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வந்துவிடட்டும்” என நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார் எடப்பாடி. தமிழ்மகன் உசேன் வந்தவுடன் தான், வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள், அவர் காலில் விழத் தயங்கவில்லை. அவர்களைத் தடுக்கவும் எடப்பாடி முயலவில்லை. எம்.ஜி.ஆர் மாடலில் தொப்பி, கண்ணாடியை தனக்கு அணியவைத்து தொண்டர் ஒருவர் வாழ்த்தியபோது, எடப்பாடியின் முகத்தில் மத்தாப்பூ பூத்தது.

கொண்டாட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “கழகத்தின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி உருவெடுத்ததில் மூன்று பேரின் பங்கு அளப்பரியது. பன்னீரின் தளபதிகளில் ஒருவராகவும், தர்மயுத்தம் காலக்கட்டத்தில் பன்னீருக்கு சகலமுமாக இருந்தவருமான கே.பி.முனுசாமி, கட்சியின் நலன் கருதி எடப்பாடி பக்கம் வந்தார். கட்சியின் சட்டவிதிகள் திருத்தப்பட்டதிலும், அரசியல்ரீதியாக பன்னீரை சமாளிக்கும் வியூகத்தையும் எடப்பாடிக்கு வகுத்துக் கொடுத்தவர் முனுசாமிதான். உறுப்பினர் சேர்க்கையை தொடங்க வேண்டுமென ஐடியா கொடுத்து, பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வானவுடன், அந்தத் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட கேட்டுக் கொண்டவரும் முனுசாமிதான்.

பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வாகுவதற்குள், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. இந்தச் சட்டப் போராட்டங்களையெல்லாம் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். பன்னீர் டீமிலேயே தனக்கென சிலரை வைத்து, அவர்களின் சட்ட நுணுக்கங்களையெல்லாம் தெரிந்துகொண்டார் சண்முகம். அதனால்தான், பன்னீர் தரப்பின் வாதங்களுக்கு எதிராக எங்களால் வலுவான வாதங்களை முன்வைக்க முடிந்தது. தனக்கு வாழ்த்து தெரிவித்த சண்முகத்தைக் கட்டியணைத்து, ‘யோவ் சண்முகம் சாதிச்சுட்டய்யா…’ என எடப்பாடி சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.

வெற்றிச் சான்றிதழைப் பெறும் எடப்பாடி

ஒற்றைத் தலைமைக்கான இந்தப் போராட்டத்தில், எஸ்.பி.வேலுமணியின் பங்கும் இருக்கிறது. டெல்லியில், எடப்பாடிக்கு எதிரான நகர்வுகளை மயிலாப்பூர் பிரமுகர் உதவியுடன் பன்னீர் தரப்பு செய்துவந்த வேளையில், அந்த நகர்வுகளை தகர்த்தெறிந்தவர் வேலுமணிதான். பியூஷ் கோயலில் தொடங்கி, நிதின் கட்கரி வரையில் தனக்கிருந்த தொடர்புகள் மூலமாக, எடப்பாடிக்குச் சாதகமான மனநிலையை டெல்லி பா.ஜ.க மேலிடத்திடம் உருவாக்கினார் வேலுமணி. இந்த அரசியல் நகர்வு பெரியளவில் எடப்பாடிக்குக் கை கொடுத்திருக்கிறது. தலைமைக்கழகத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த கட்சி சீனியர்களிடம், ‘நீங்க இல்லைனா, இந்த வெற்றி சாத்தியமில்லை’ என எடப்பாடி யாரிடமும் சொல்லவில்லை. ‘அ.தி.மு.க-வினரின் அரசியல் இருப்பு என்பது தன்னை முன்னிறுத்தினால் மட்டுமே’ சாத்தியம் என்கிற நிலையை உருவாக்கிவிட்டார் எடப்பாடி. அவரை கட்சி நிர்வாகிகள் பார்த்த விதத்திற்கும் இனி பார்க்கப் போகும் விதத்திற்கும் நிறைய வித்தியாசம் வரப்போகிறது” என்றனர் விரிவாக.

எடப்பாடி பழனிசாமி

பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தீவிரமாகிறது அ.தி.மு.க. அதன்பிறகே, பி ஃபார்மில் கையெழுத்திடும் அதிகாரத்தை எடப்பாடி பெறுவார் என்பதால், அதற்கான நடைமுறையை வேகப்படுத்தியிருக்கிறார்கள். கட்சி உறுப்பினர் சேர்க்கையை விரைவாக முடித்து, தொண்டர்கள் அனைவருக்கும் ‘கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி’ எனக் கையெழுத்திட்ட உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. “பொதுச் செயலாளர் பதவியை ஏற்றக் கையோடு, தன் வேகத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி. உட்கட்சியில் அவருக்கு இருந்த தடைகளெல்லாம் தகர்ந்துவிட்டது. இனி அவர் டார்க்கெட் தி.மு.க மட்டும்தான்” என்கிறார்கள் இலைக்கட்சியின் சீனியர் புள்ளிகள். ஒரு புதிய அத்தியாயம் அ.தி.மு.க-வில் தொடங்கியிருக்கிறது. அது என்ன மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறதா என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.