'கடவுள் நெனச்சா பிழைப்பாங்க'.. ம.பி.யில் கோவில் கிணற்றுக்குள் விழுந்து 13 பேர் பலி..

மத்திய பிரதேச கோயிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் போது கிணற்றின் படிக்கட்டு இடிந்து ஏற்பட்ட விபத்தில் கிணற்றுக்குள் விழுந்த 13 உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள படேல் நகர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இன்று ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ஆழமான கிணற்றின் மேல்கூரை உடைந்ததில் வழிபாட்டில் இருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதில், பெரும்பாலானோர் பெண்கள் என்பதால் கிணற்றுக்குள் விழுந்த 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில் சிறுமி இன்னும் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவிக்கையில், கடவுளின் ஆசீர்வாதத்துடன் மீட்புப் பணியில் முழு பலத்தையும் பயன்படுத்தி வருகிறோம். மீட்பு பணியினரிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இதுவரை 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உள்ளே ஒன்பது பேர் பத்திரமாக உயிருடன் உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ராமரின் ஆசீர்வாதத்துடன், எங்களின் வசம் உள்ள அனைத்து உபகரணங்களுடன் எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்போம் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில், நான் கலெக்டரிடம் பேசினேன். அவர் அந்த இடத்தில் இருக்கிறார். அங்கு இருட்டாக இருக்கிறது, ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது மற்றும் தண்ணீர் மாசுபட்டுள்ளது. எனவே, கிணற்றில் சிக்கியவர்கள் பயப்படாமல் இருக்க ஆக்சிஜன் மற்றும் வெளிச்சம் வழங்கப்பட்டு வருகிறது. மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் உள்ளன, கடவுள் நினைத்தால் உயிரிழப்பு குறைவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

இதற்கிடையே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் மீட்பு பணிகளை குறித்து கேட்டறிந்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.