'தஹி' வேணாம் தயிர் ஓகே… அறிவிப்பை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு..!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள பால் கூட்டுறவு அமைப்பின் தயிர் பாக்கெட்டுகளில் ”தஹி” என்ற இந்தி பெயர் இடம்பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதியிருந்தது. இது மீண்டும் இந்தி திணிப்பு அதிர்வலைகளை உண்டாக்கியது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான எச்சரித்து ட்வீட் போட்டிருந்தார்.

எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த ட்வீட் தென் மாநிலங்கள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும், ட்விட்டரில் #tahinahipoda என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆக தொடங்கியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் FSSAI க்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தயிர் பாக்கெட்டில் ‘தஹி’ என்று இந்தியில் குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு வாபஸ் வாங்கியுள்ளது.

முன்னதாக இந்தி பேசாத மாநிலங்களின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியிருந்த FSSAI; curd (தயிர்) என்ற ஆங்கில வார்த்தைக்கு பதிலாக ”தஹி” என்ற இந்தி சொல்லை பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுமானால் அந்தந்த மொழியில் உள்ள வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியது.

அதாவது தமிழ்நாட்டில் ஆவின் தயிர் பாக்கெட்டில் ”தஹி” என்று மெயினாக குறிப்பு அடைப்பு குறிக்குள் (தயிர்) என்று எழுதிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ள FSSAI , தயிர் பாக்கெட்டுகளில் அந்தந்த பிராந்திய மொழியையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

உதாரணமாக, “(தஹி)” அல்லது “(மொசரு)” அல்லது “(தயிர்)” அல்லது “(பெருகு)” என்ற சொற்களை அந்தந்த மாநில மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.