'தொலைந்துவிடுவீர்கள்…' தஹி சர்ச்சையில் ஸ்டாலின் கொடுத்த சவுக்கடி… உடன்பட்ட அண்ணாமலை

Aavin Thayir Dahi FSSAI Issue:  தமிழ்நாட்டிற்கும், இந்தி திணிப்பு எதிர்ப்புக்கும் நீண்ட நெடிய வரலாறே உள்ளது எனலாம். 1939ஆம் ஆண்டில் தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் உயிர்தியாகம் முதல் சமீபத்திய ‘இந்தி தெரியாது போடா’ வரை அதன் போராட்ட வடிவம் மாறியிருந்தாலும், இந்தி திணிப்பை எதிர்ப்பதன் தீவிரம் மட்டும் இதுவரை குறையவேயில்லை எனலாம். 

இருப்பினும், தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது இந்தி திணிப்பு படையெடுப்பு நடந்துகொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் பல வடிவங்களில் இந்தி திணிப்பு நடந்துகொண்டேதான் இருக்கிறது. 

தற்போது அதன் உச்சமாக தமிழ்நாட்டின் ‘ஆவின்’ மற்றும் கர்நாடகாவின் ‘நந்தினி’ ஆகிய பால் பொருட்களில் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இரண்டு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னடத்தில் ‘மோசரு’ மற்றும் தமிழின் ‘தயிர்’ போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தஹி என்று வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தேவை என்றால் அடைப்புக்குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.  

இந்தி வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவு, இந்தி திணிப்பு நடவடிக்கையாக பல்வேறு தரப்பினர் பார்க்கின்றனர், எனவே கடும் எதிர்ப்பு எழுகிறது. 

இரண்டு மாநிலங்களிலும் வட இந்தியர்கள் அதிகம் இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதியை பின்பற்றாதபட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து நந்தினி சார்பாக இதற்கு விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆவின் சார்பாகவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,”எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!; மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!. குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!” என குறிப்பிட்டுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து தற்போது அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் இருமொழி கொள்கையை சீர்குலைத்து, மும்மொழி கொள்கையை புகுத்தவே இத்தகைய செயல்கள் நடப்பதாக ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அண்ணாமலை அறிக்கை

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவந்தார். முதல்முறையாக, குழந்தைகள் தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க புதிய கல்விக்கொள்கை மூலம் வழிவகை செய்தார். 

தமிழ் மொழி வளத்தையும், அதன் இலக்கிய வளத்தையும் பிரதமர் மோடி உலகரங்கில் பல மேடைகளில் போற்றி பேசியுள்ளார். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பு, பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. எனவே, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தி வார்த்தையை தங்கள் பாக்கெட்டில் பயன்படுத்த மாட்டோம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு ஆவின் பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.