போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற வாலட்டுகளில் இருந்து ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 1.1% கட்டணம்: நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது

* வங்கி டூ வங்கிக்கு மட்டும் இலவசம் தொடரும்

புதுடெல்லி: போன் பே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட டிஜிட்டல் வாலட்டுகளில் இருந்து  ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் அதிக தொகைகளை யு.பி.ஐ செயலிகள் மூலம் அனுப்ப, 1.1 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் தற்போது யுபிஐ மூலம்,   கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. பெரு வணிக நிறுவனங்கள் முதல் நடைபாதையில் உள்ள சில்லறை  கடைகள் வரை இந்த ஆப்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்து விட்டது.   

இந்நிலையில், டிஜிட்டல் வாலட்டுகளில் இருந்து யுபிஐ மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிபிஐ எனப்படும் டிஜிட்டல் வாலட்டுகளில் இருந்து யுபிஐ மூலம் பணம் செலுத்தி சூப்பர் மார்கெட்களில் பொருட்கள் வாங்க பணம் செலுத்த 0.9 சதவீதமும், மியூச்சுவல் பண்ட்கள், ரயில் டிக்கெட்கள், காப்பீடு திட்டங்களில் பணம் செலுத்த 1 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.  இதுதவிர பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு 0.5 சதவீதமும், செல்போன் ரீ சார்ஜ், கல்வி, விவசாயம் தொடர்பாக பணம் செலுத்த 0.7 சதவீதமும் கட்டணம் விதிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியதால் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  யுபிஐ மூலம் பணி பரிவர்த்தனைகள் செய்வது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும். ஏப்ரல் 1ம் தேதி யுபிஐ செயலிகளில் ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் பண பரிவர்த்தனைகள் செய்தால் 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது டிஜிட்டல் வாலட் மூலம் நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே. வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு யுபிஐ வழியாக பணம் அனுப்பவது இலவசம் தான். எனவே யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* பிபிஐ என்றால் என்ன?

பிபிஐ என்பது டிஜிட்டல் வாலட். அங்கு நீங்கள் பணத்தை ஏற்றி வெவ்வேறு பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இதில் பணம் வங்கியில் சேமிக்கப்படவில்லை. மாறாக ஒரு தனி டிஜிட்டல் நிறுவனத்தில் சேமிக்கப்படுகிறது. பிபிஐ வணிகப் பரிவர்த்தனை என்பது, வாலட் உள்ள பணத்தை யுபிஐ மூலம் கடை உரிமையாளர் போன்ற வணிகருக்குப் பணம் செலுத்துவது. இதில் வங்கி கணக்கிற்கு பதில் வாலட்டில் இருந்து பணம் அனுப்பப்படும்.

* பரிமாற்ற கட்டணம் என்றால் என்ன?

பரிமாற்றக் கட்டணம் பொதுவாக பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்வது, செயலாக்குவது மற்றும் அங்கீகரிக்கும் செலவை ஈடுகட்ட விதிக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை வணிகர்களின் பிரிவில் கட்டணம் குறைவாக இருப்பதால் வெவ்வேறு வணிகர்களுக்கு வெவ்வேறு பரிமாற்றக் கட்டணம் உள்ளது.

* யார் கட்டணம் செலுத்த வேண்டும்?

ஒரு வாடிக்கையாளர் யுபிஐ மூலம் பிபிஐ வாலட்டைப் பயன்படுத்தி ஒரு வணிகருக்கு பணம் செலுத்தினால், பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணம் வாடிக்கையாளரிடமிருந்து அல்ல, வணிகரிடம் இருந்து விதிக்கப்படும்.

* என்பிசிஐ என்ன சொல்கிறது?

ஒரு வணிகருக்கு யுபிஐ நெட்வொர்க்கைப் பயன்படுத்தி பிபிஐ மூலம் ரூ. 2,000 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்தினால்  ஏப்ரல் 1 முதல் 1.1% பரிமாற்றக் கட்டணம் வசூலிக்கப்படும். எரிபொருள் சேவை நிலையங்கள் போன்ற நிறுவனங்களுக்கு குறைந்த சதவீதமாக 0.5%. கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.1 சதவீத கூடுதல் கட்டணம் பிபிஐ வாலட் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படும். வங்கியிலிருந்து வங்கிக்கு யுபிஐ பரிவர்த்தனைகளில் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த கட்டணங்களும் வரும் செப்.30ம் தேதி பரிசீலிக்கப்படும்.

* பொதுமக்கள் தலையில்தான் விடியும்

வாலட்டில் இருக்கும் பணத்தை யுபிஐ பரிவர்த்தனை மூலம் வர்த்தகருக்கு மாற்றினால் விதிக்கப்படும் கட்டணத்தை வர்த்தகர்தான் செலுத்த வேண்டும் என்று என்.பி.சி.ஐ தெரிவிக்கிறது. ஆனால், யுபிஐ பரிவர்த்தனை வங்கியில் இருந்தா? வாலட்டில் இருந்தா? என்பதை வர்த்தகரால் தெரிந்து கொள்ள முடியாது. இதனால், ஒட்டு மொத்தமாக எல்லா பொருட்களின் விலையையும் வர்த்தகர்கள் உயர்த்தி பில் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர். எந்த ஒரு வியாபாரியும் தனது லாபத்தை குறைத்துக் கொள்ள விரும்பமாட்டார். அதனால், இந்த கூடுதல் கட்டணம் பொதுமக்கள் தலையில்தான் விடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இது மேலும சுமையை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.