இலகுரக போக்குவரத்து வாகனங்களை இயக்க பேட்ஜ் பெறுவதில் இருந்து விலக்களிப்பதால் லஞ்சம் குறையும்: போக்குவரத்து ஆணையர் தகவல்

சென்னை: போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க, பொதுப்பணி வில்லையை (பேட்ஜ்) ஓட்டுநர்கள் பெற வேண்டும். ஆனால், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இலகுரக பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு, பேட்ஜ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகத்திலும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், அனைத்து பொதுப் போக்குவரத்து இலகுரக வாகனங்களையும் பொதுப்பணி வில்லை பெறாமலேயே இயக்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த பேட்ஜ் பெற இடைத்தரகர்கள் வாயிலாக விண்ணப்பிக்காதவர்களில் பெரும்பாலானோரை போக்குவரத்து அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், லஞ்சமும் பெருமளவு குறையும்.

அதே நேரம், போக்குவரத்து வாகனத்துக்கான உரிமம் (மஞ்சள் போர்டு) பெற வேண்டும். ஓட்டுநருக்கான பேட்ஜ் பெறுவதில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், ரூ.10 கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்படுகிறது. எனவே, தகுதிவாய்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே உரிமம் பெற முடியும்.

வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் 18 இடங்களில் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும். இதனால், காலாவதியான, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக் கூடிய வாகனங்கள் இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும்.

இத்துடன் சேர்த்து 8 அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதில் 5 அறிவிப்புகள் இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓட்டுநர் மற்றும் வாகனத்தின் தகுதியை, இயந்திரங்கள் மூலம் கண்காணிப்பதால் முறைகேடுகள் தவிர்க்கப்படும். இதுபோன்ற முயற்சிகள் மூலம் வரும் நாட்களில் போக்குவரத் துறையில் லஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.