பார்வையற்றவருக்கு EMI மறுப்பு… `மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்புச் சட்டம்' என்ன சொல்கிறது?

 பிறக்கும் போது உள்ள உடலின் அமைப்பு இயற்கையானது. அதனை மனிதர்களால் தீர்மானிக்க முடியாது.  பிறக்கும் போது அல்லது விபத்தின் காரணமாக  கண்பார்வையில்  குறைபாடு உடையவர்கள், காது கேட்காதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், கைகால்களில்  குறைபாடுடையவர்கள் ஆகியவர்களை   மாற்று திறானாளிகள் என்று அழைப்பர். அவர்களின் உடலில் குறை இருந்தாலும், அவர்கள் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமைகளை  பாதுகாப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் மாற்று திறனாளிகள்  மீதான  சமூகத்தின் பார்வையில் இன்னும் முன்னேற்றம் வரவில்லை என்பதை நடக்கும் சம்பவங்கள் காட்டுகிறது. மாற்றுத்திறனாளிகள்  பொருளாதார தன்னிறைவு அடைந்தாலும்  சமூகத்தின் அணுகுமுறை மோசமாகவே உள்ளது.

பார்வையற்றவர் மாதிரி படம்

பார்வையற்றவர் ஒருவர்   தமிழகத்தின்   முக்கியமான  நிறுவனம் ஒன்றில், கோடைக்காலம் தொடங்கியதால் EMI-ல்  ஏசி வாங்குவதற்காகச் சென்றுள்ளார். ஆனால் அவர் பார்வையற்றவர் என்ற காரணத்தாலேயே அவருக்கு  இ.எம்.ஐயில் ஏசி விற்பதற்கு   அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையில் உள்ளவர் மறுத்துள்ளார். வேறொருவர் ஐடி ஃபுரூபில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சம்பளத்திலிருந்து வாங்கும் ஏசி இன்னொருவர் ஐடியில்  வாங்குவதை எப்படி  ஏற்றுக்கொள்வது? மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டம் 2016  மாற்றுத்திறனாளிகளின் உரிமையை  வலியுறுத்துகையில் நிறுவனத்தின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது என்று பார்வையற்றவர்  தன் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  சரண்யாவிடம் பேசினோம். அவர், ” அரசியல் அமைப்பு சட்டம் வலியுறுத்தும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட  வேண்டும்   என்ற அடிப்படையில் மாற்றுதிறனாளிகள் உரிமைச் சட்டம்  2016   கொண்டுவரப்பட்டது.  உடலில் எந்த  சவால்களும் இல்லாதவர்களைப் போல் மாற்றுதிறனாளிகளுக்கும்  சம வாய்ப்பும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது.

பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், நடப்பதற்கு சிரமப்படுபவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்,  யோசிக்கும் திறனில் சவால்கள் உடையவர்கள் ஆகியோர் இச்சட்டத்தின் கீழ் மாற்றுத்திறானாளிகளாக கருதப்படுவர்கள். இவர்களுக்கு  இட ஒதுக்கீடு  கல்வியில் 5 சதவீதத்துக்கு குறைவாகவும், அரசு வேலைவாய்ப்பில்  4 சதவீத்துக்கு குறைவாகவும் இருக்க கூடாது என்று சட்டம் வலியுறுத்துகிறது. மாற்றுத்திறனாளிகளை உடலளவில் துன்புறுத்தினால் சிறைத் தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும். தகவல்  தொழில்நுட்பத்துக்கான மத்திய அமைச்சகம்   மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் உலகளாவில்  அணுகலுக்கான தேசியக்கொள்கையை ( national policy on universal accessibility ) கொண்டுவந்துள்ளது. எந்தவித பாகுபாடுமின்றி மாற்றுத்திறனாளிகளும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்  என்பதே  இந்த கொள்கையின் நோக்கம். ஆனால்  பெரும்பாலானவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

சென்னை உயர்நீதிமன்றம்

இதனால் பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் உரிமை மறுக்கப்படுகிறது. நிறுவனம் பார்வையற்றவர் என்பதாலேயே தொழில்நுட்ப பொருளை இ.எம்.ஐயில்  விற்க மறுத்தால் அது ஒடுக்குமுறையே. பார்வையற்றவர் வேலைக்கு செல்லவில்லை என்றால் கூட ஏசியை  ஈ.எம்.ஐ யில் விற்பதற்கு தயக்கம் கொள்வதில் கூட நியாயம் இருக்கிறது. ஆனால் பொருளாதார தன்னிறைவு அடைந்தவரை பார்வையற்றவர் என்பதாலே மறுத்தால் இது சட்டப்படி மிகப்பெரிய தவறு. அந்நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர் வழக்குப் போடலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம், திட்டங்கள் நகர்ப்புறத்தில் உள்ளது போல கிராமப்புறங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றார்.

நிதிநிறுவனத்தில் பணிபுரிவரிடம் பேசினோம். பெயரை வெளியிட மறுத்தவர், “பார்வையற்றவர்கள் இ.எம்.ஐ கட்டாமல் ஏமாற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதால் நிறுவனம் இ.எம்.ஐயை மறுத்திருக்கலாம்” என்றார்.

தொழில்நுட்ப கடை

சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு சென்று பார்வையற்றவருக்கு இ.எம்.ஐயில் ஏசி போன்ற பொருட்கள் கொடுப்பீர்களா என்று கேட்டோம். வேலைக்கு செல்பவராக இருக்கும்பட்சத்தில் ஆவணங்கள் சரியாக இருந்தால் கொடுப்போம் என்று கூறினர்.

ஏன் ஒரு கடைக்கும், இன்னொரு கடைக்கும் இந்த முரண். நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை அரசு முறைப்படுத்த வேண்டும். பார்வையற்றவரின் உரிமை பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்வது இன்றியமையாத தேவை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.