ராகுல் பதவி இழப்பு குறித்து ஜெர்மனி வெளியுறவு துறை கருத்து: காங்கிரஸுக்கு மத்திய சட்ட அமைச்சர் கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்திய நீதித் துறையில் அந்நிய சக்திகள் தலையிட முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திஎம்பி பதவியை இழந்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நேற்று முன்தினம் கூறும்போது, “ராகுல் காந்தி மீதான தீர்ப்பு,அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டதை கவனத்தில் கொண்டுள்ளோம். அவர் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்திய நீதித் துறையின் நேர்மை, இந்தியாவின் ஜனநாயக கொள்கைகள் ராகுல் காந்தியின் வழக்கிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஜெர்மனி செய்தித் தொடர்பாளர் பேட்டி அளிக்கும் வீடியோவை அந்த நாட்டின் முன்னணி ஊடகமான டி.டபிள்யூ.வின் சர்வதேச பிரிவு ஆசிரியர் ரிச்சர்ட் வால்கர்தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இணைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ட்விட்டரில் நேற்றுவெளியிட்ட பதிவில், “ராகுல் காந்திவிவகாரத்தில் இந்திய ஜனநாயகத்தின் நிலையை எடுத்துரைத்த ஜெர்மனி வெளியுறவுத் துறைக்கும், டி.டபிள்யூ. சர்வதேச பிரிவு ஆசிரியருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு சக்திகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுக்கிறார். இந்திய நீதித் துறையில் அந்நிய சக்திகள் தலையிட முடியாது. பிரதமர் நரேந்திர மோடி இருக்கும்போது அந்நிய சக்திகளின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கருத்து

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் உள்விவகாரங்களில் அந்நிய சக்திகள் தலையிட காங்கிரஸ் விரும்புகிறது. வெளிநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆட்சி மாற்றத்துக்கு உதவ அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது ஆதரவு கருத்துகள் வெளியாகும்போது காங்கிரஸ் நன்றி தெரிவிக்கிறது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,“இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு அமைப்புகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது. இது வெட்கக்கேடானது. சட்டம் யாருக்கும் வளைந்து கொடுக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.