பிரபல கர்நாடக இசைப் பாடகர் கிருஷ்ண குமார்: பிரகாசமான தோற்றமும், அன்பான சிரிப்புமாக அணுகுவது தான், பிறருக்கு நாம் கொடுக்கிற சிறந்த வரவேற்பு என்று நம்புகிறேன்.
அதனால், வருத்தமாகவும், சோகமாகவும் இருப்பதே எனக்கு பிடிக்காது. என் குருஜி பாலமுரளி கிருஷ்ணாவிடம், கற்றுக் கொண்ட நல்ல பண்புகளில் இதுவும் ஒன்று.
குருஜிக்கும், எனக்கும் மூன்று தலைமுறை பந்தம். அவரிடம் நானும், என் மனைவியும் இசை கத்துக்கிட்டது, உரையாடி மகிழ்ந்தது எல்லாம், எங்களின் இசைப் பயணத்துக்கும், இல்லறத்துக்கும் பேருதவியாக அமைந்தது.
என் மனைவி சினிமாவில் பாட ஆசைப்பட்டாங்க. அவங்க குரல் பதிவு செய்யப்பட்ட கேசட்டை, இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் கொடுத்தோம்.
ரஜினி நடித்த, சந்திரமுகி படத்தில், பாட வாய்ப்பு கிடைத்தது. திரையிசையில் அறிமுக பாடகருக்கு, இப்படியொரு வரவேற்பு கிடைக்கிறது பெரிய விஷயம்.
சில மலையாள படங்களில், நான் பாடியிருந்தாலும், கர்நாடக இசை தான் எனக்கு அதிக மனநிறைவை கொடுக்கிறது. இளைஞர்களின் இசைத்திறனை பட்டை தீட்டி, புதுப்புது பாடகர்களை உருவாக்கி விடுவதை, பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.
கிருஷ்ணகுமாரின் மனைவியும், கர்நாடக இசைப் பாடகியுமான பின்னி: பேஷன் விஷயத்தில், எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம்.
வெளியிடங்களுக்கு போகிற போது, ‘பளிச் மேக்கப்’பில் கலர்புல்லா டிரஸ் பண்ணிப்பேன். தவிர நகை, நகைச்சுவை, சுவை ஆகிய மூன்றும் தான், எனக்கு ரொம்ப பிடித்த விஷயங்கள்.
சந்திரமுகி படம் வெளியான ஏழு மாதங்களுக்கு பின் தான், எனக்கு புதுப்பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.
நினைத்த விஷயத்தை சுதந்திரமாக செய்வதற்கான ஊக்கம் கொடுக்கிற, கணவர் கிடைப்பது பெண்களுக்கு பெரிய வரப்பிரசாதம்.
அந்த விஷயத்தில், என் கணவர் ஒருபடி மேலே போய், அவரை விட எனக்கு அதிக புகழ் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்.
கர்நாடக இசையில் என்னை விட, என் கணவர் திறமைசாலி. ஐந்து மொழிகளில் பாடல்கள் எழுதி இசையமைப்பார். ஆனாலும், கச்சேரிகளில் அவரை விட நான் நன்றாக பாட வேண்டும் என்று, என்னை ஊக்கப்படுத்துவார்.
நாங்கள் இருவரும் எந்த கோபத்தையும், இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்க விட மாட்டோம். சந்திரமுகி யில் நான் பாடிய, ‘ரா… ரா…’ பாடல் ஒலிக்கிற வரை, எனக்கு, ‘ரிட்டயர்மென்ட்டே’ கிடையாது.