ஏப். 11-ல் வயநாட்டிற்கு செல்கிறார் ராகுல் காந்தி..!!

ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்கு பிறகு ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு அடிக்கடி வந்தார். அங்குள்ள மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தார்.

இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக கொண்டாடப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் மோடி பற்றி தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் பறித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மேலும் தீப்பந்தங்கள் ஏந்தியும், ரெயில் மறியல் போராட்டத்திலும் தொகுதி மக்கள் ஈடுபட்டனர். எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி வயநாட்டை மறக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். அது எனது சொந்த தொகுதி என்றும், அங்குள்ள மக்களை சந்திக்க செல்வேன் எனவும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வர இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் அவரது தொகுதி வயநாடு தான். தொகுதி மக்கள் மீது அவர் அளப்பரிய அன்பு வைத்துள்ளார். அதனால் தொகுதி மக்களை சந்திக்க வருகிற 11-ந் தேதி வயநாடு வருகிறார். அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சி சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் வயநாட்டில் வாழும் மக்களுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை வீடு, வீடாக வினியோகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய அளவில் 19 கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் பங்கேற்றதற்கு காங்கிரஸ் பெருமிதம் கொள்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக போராட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் காங்கிரஸ் கைகோர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.