காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் எனது நற்பெயரை கெடுக்க சதி: போபால்-டெல்லி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்

போபால்: ‘எனது நற்பெயரை சீர்குலைக்க விரும்பும் சிலர், அதற்காக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்து இணைந்து செயல்படுகின்றனர்’ என காங்கிரசை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு மற்றும் ராகுலின் தகுதிநீக்கம் தொடர்பாக ஜெர்மனி அரசு காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது போன்ற விவகாரங்களால் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் வார்த்தை மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நேற்று, போபால் – டெல்லி இடையேயான வந்தே பாரத் ரயில் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 2014 முதல், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க உறுதி ஏற்றுள்ளதாக வெளிப்படையாக கூறிக் கொள்ளும் நபர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கூலி கொடுத்து சிலரை நியமித்துள்ளனர். அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து ஆதரவு தருகிறார்கள். இவர்கள் தொடர்ந்து எனது இமேஜை கெடுக்கவும், களங்கப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் நாட்டின் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பழங்குடிகள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒவ்வொரு இந்தியனும் எனக்கு பாதுகாப்பு கவசமாக மாறிவிட்டனர். இதனால், இமேஜை சீர்குலைக்க முயல்பவர்கள் புதிய தந்திரங்களை கையாள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் என்னை குழிதோண்டி புதைக்கவும் சபதம் எடுத்துள்ளனர். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். அவர் எந்த இடத்திலும் காங்கிரசின் பெயரை குறிப்பிடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.