பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த கேரளா எதிர்ப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவின் திருமண சட்டங்களின்படி பெண்ணின் திருமண வயது 18, ஆணின் வயது 21 ஆக உள்ளது. இந்த சூழலில் பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்ய சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு கடந்த 2021-ம்ஆண்டில் மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

ஜெயா ஜேட்லி குழு அளித்த பரிந்துரைகளின்படி பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் பெண்களின் திருமண வயது குறித்த கருத்துகளை தெரிவிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய மகளிர் ஆணையம் கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியது. இதன்படி கேரள அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

போக்சோ சட்டத்தின்படி 18 வயது பூர்த்தியான பெண்கள் உடல் உறவில் ஈடுபட சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. 18 வயதானபெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். பெண்களின் திருமண வயதை உயர்த்துவது சர்வதேச பாரம்பரியங்களுக்கு எதிரானது. ஐ.நா.சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேசஅமைப்புகளும் பெண்களின் திருமண வயதை 18 ஆக அங்கீகரித்துள்ளன. இதை மீறி இந்தியாவில் பெண்களின் திருமண வயதை உயர்த்தினால் பல்வேறு சிக்கல்கள் எழும். எனவே பெண்களின் திருமண வயது 18 ஆகவே தொடர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.