மக்களே எச்சரிக்கை..!! எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு இந்தியாவில் பரவுகிறது..!!

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை காவு வாங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொருளாதார முடக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதின் விளைவாக தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் உலகம் முழுவதும் சகஜநிலை திரும்பியது. இருப்பினும் அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மாறுபாடு, அதன் பல்வேறு திரிபுகள் என பல வகைகளில் உருமாறி பரவிய வண்ணம் உள்ளது.

இதனால் சில நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது.

இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க எக்ஸ்.பி.பி. வகை வைரஸ் பரவலை காரணம் என தெரியவந்துள்ளது.

எக்ஸ்.பி.பி. வைரஸ் என்பது ஒமைக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸ்களாகும். அதாவது பி.ஏ.2.10.1, பி.ஏ.2.75, எக்ஸ்.பி.எப்., பி.ஏ.5.2.3 மற்றும் பி.ஏ.2.75.3 வகை வைரஸ்களில் மறு வடிவம் என கூறப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ்களின் மரபணு மாற்றத்துடன் எக்ஸ்.பி.பி.1.16 என்ற வைரசும் பரவி வருவதால் தான் இந்தியாவில் பரவி வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் மட்டுமல்லாது தெலுங்கானா, அரியானா, இமாச்சலபிரதேசம், ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் பரவல் இருப்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. இந்த வகை எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் வேகமாக பரவ கூடியதாக உள்ளது. சாதாரணமாக தும்மல் போட்டாலே இது மிக எளிதாக மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என கூறப்படுகிறது.

மேலும் எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் என்பது எக்ஸ்.பி.பி.1.15 வகை வைரசை விட அதிக வீரியத்துடன் உள்ளது. கடந்த மாதம் நிலவரப்படி இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மறுவடிவமாக கருதப்படும் இந்த வகை வைரஸ் வேகமாக பரவினாலும் கூட ஒமைக்ரானை போல பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை ஏற்படுத்தாது என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

உலகளவில் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 26-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை புதிய ஒமைக்ரான் மாறுபாடுதான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையோ அல்லது இந்த வகை தொற்றால் அதிக உயிரிழப்புகளோ இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.