மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் அட்மிட்! – என்ன நடக்கிறது சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்?

திருச்சி மாம்பழச்சாலை அருகே `சாக்சீடு குழந்தைகள் இல்லம்’ செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்டு, இந்த சாக்சீடு குழந்தைகள் இல்லத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் இந்தக் காப்பகத்தில் தற்சமயம் 35 குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் காப்பகத்திலுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு, 8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். துரதிஷ்டவசமாக சிகிச்சையிலிருந்த ஒரு பெண் குழந்தை பலியானது. இந்த நிலையில், மறுபடியும் காப்பகத்திலிருந்த 8 குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காப்பக ஊழியர்கள், பதறியடித்தபடி 8 குழந்தைகளையும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 8 குழந்தைகளையும் திருச்சி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

சாக்சீடு குழந்தைகள் இல்லம்

இரண்டு நாள்களுக்கு முன்பு காப்பகத்திலிருந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். ‘சாக்ஸீடு காப்பகத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதில் போதிய கவனம் இல்லாமல் இருக்கின்றனர். இதனால்தான் அடிக்கடி குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போவதோடு, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் உண்டாகிறது. இத்தகைய காப்பகங்களிலுள்ள குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்கப்படுகிறதா… குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து முறையாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றனவா என மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்’ என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் பேசினோம். “கடந்த முறை இப்படியான சம்பவம் நடைபெற்றதையடுத்து, அப்போதே காப்பக அதிகாரிகள், மருத்துவர்களை வைத்து மீட்டிங் நடத்தினோம். அதில், குழந்தைகள் மருத்துவர் தினமும் காலையில் காப்பகத்துக்கு வந்து குழந்தைகளின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், குழந்தைகளைப் பரிசோதனை செய்த விவரங்கள் மற்றும் உடல்நிலை குறித்து பதிவேட்டினை பராமரிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தோம். அப்படி வழக்கமான பரிசோதனையைச் செய்யும் போதுதான், 8 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. அதையடுத்து குழந்தைகள் 8 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

தற்போது 8 குழந்தைகளும் நலமுடன் இருக்கின்றனர். கைவிடப்பட்ட குழந்தைகள் என்பதால் அவர்கள் காப்பகத்துக்கு வரும்போதே சத்துக்குறைவுடனே இருக்கின்றனர். அதேபோல காப்பகத்தில் 35 குழந்தைங்களுக்கு 7 குழந்தைகள் காப்பாளர்கள்தான் இருக்கின்றனர். குழந்தை காப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காப்பகத்திலுள்ள குழந்தைகளை கவனித்து பராமரிக்கும் அந்தப் பணியாளர்களுக்கு, குழந்தைகளை எப்படி சுகாதாரமான முறையில் கையாள வேண்டும் என்கிற அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.