விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது – மஹிந்த அமரவீர

விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிற்கிடையிலான கலந்துரையாடல் (31/03/2023) விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்துவதுடன் விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் .

விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பசளை விநியோகம் நடைபெற்று வருகின்றன.ஒரு ஹெக்டேயருக்கு TSP பசளை 55 கிலோ கிராமும் யூரியா 225 கிலோ கிராமும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

TSP பசளை முற்று முழுதாக இலவசமாகவும் யூரியா சலுகை அடிப்படையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன் யூரியாவினுடைய விலையை குறைப்பது தொடர்பாகவும் அவதானத்தை செலுத்தியுள்ளோம். ஜனாதிபதியினுடைய அனுமதி கிடைக்கப்பெற்றால் அதனை செய்ய முடியும்.

மேலும், மூன்று போகங்களிலும் விவசாயம் செய்வதன் மூலம் உள்ளூர் விவசாய உற்பத்தியினுடைய வினைத்திறனை அதிகரித்து விவசாயிகளுடைய வருமானத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.

மாவட்டத்தில் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களையும் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

தற்போது, ​​நம் நாட்டில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை, கிராமத்துக்கு அறிமுகப்படுத்தி, அது குறித்த அறிவை வழங்க வேண்டும்.
திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்திக்கு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உதவுமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்தார்.

இப்பகுதியில் உள்ள பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகள், அப்பகுதிக்கு ஏற்ற கலப்பின மாடுகளை வழங்கல், விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளின் அளவை அதிகரித்தல் , நீர்ப்பாசன வசதிகள், கால்நடை, விலங்குகளால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பு உட்பட பல விடயங்களை மாவட்ட விவசாய சங்கத்தினர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந் நிகழ்வோடு இணைந்ததாக 2021 இல் சிறுபோகத்தில் விவசாய செய்கைக்கான நட்ட ஈடும் இதன் போது வழங்கப்பட்டது. 13 விவசாயிகளுக்கு தலா 80000 ரூபாஎன்ற அடிப்படையில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதுடன் விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொண்டு மூன்று விவசாயிகளுக்கான பிரதிபலனும் விவசாய காப்புறுதி சபையினுடைய செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் 10 பேர்களுக்கான முகவர் அனுமதி பத்திரங்களும் இதன் போது அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கல், இலவச பசளை வழங்கல் நிகழ்வும் இதன் போது நடைபெற்றது.

இந் நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம,கிழக்கு மாகாண அமைச்சினுடைய செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், விவசாய சங்கங்களினுடைய தலைவர்கள் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.