வாஷிங்டன், இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், எல்லையில் உள்ள நிலவரம் உள்ளிட்டவை தொடர்பான ‘சாட்டிலைட்’ படங்கள், உளவுத் தகவல்களை இந்தியாவுக்கு அமெரிக்கா பகிர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
அண்டை நாடான சீனாவுடன், ௩,௨௦௦ கி.மீ., துார எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இதுவரை முறைப்படி எல்லை நிர்ணயிக்கப்படாததால், எல்லை தொடர்பாக தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த 1992ல் போர் மூண்டது.
இதையடுத்து, முந்தைய ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இரு நாடுகளும் எல்லையை வகுத்து, பராமரித்து வருகின்றன.
எதிர்ப்பு
இந்நிலையில், ௨௦௨௦ல் கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. உடனடியாக நம் படைகள் விரைந்து சென்று, அதை முறியடித்தன. இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இருப்பினும், சில இடங்களில் இரு நாட்டு படைகளும் தொடர்ந்து முகாமிட்டு உள்ளன.
இதற்கிடையே, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தன் நாட்டின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள சில இடங்களின் பெயர்களை சமீபத்தில் சீனா மாற்றியது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இந்தியா, சீனா இடையேயான இந்த எல்லைப் பிரச்னை, எதிர்காலத்தில் தீவிரமடையலாம் என, சில நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சீனா தொடர்பான தகவல்களை இந்தியாவுக்கு அமெரிக்கா பகிர்ந்து வருவதாக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலின்படி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
அமெரிக்கா மற்றும் சீனா இடையே, வர்த்தக, பொருளாதார மோதல் உள்ளது. மேலும், ஆதிக்க சக்தியாக சீனா உருவாவதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்கு தேவை.
அதனால், இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து நல்ல நட்புறவில் உள்ளது. இதனடிப்படையில், இரு நாடுகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கைகள்
சீனா தொடர்பான உளவு தகவல்கள், சாட்டிலைட் படங்களை இந்தியாவுக்கு அளிக்க அமெரிக்கா முன் வந்துள்ளது.
அதன்படியே, ௨௦௨௦ல் சீனப் படைகள் கிழக்கு லடாக் நோக்கி முன்னேறியது தொடர்பான தகவல்கள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
சீனப் படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது உளவுத் தகவல்கள் மற்றும் சாட்டிலைட் படங்களும் இந்தியாவுக்கு அமெரிக்கா பகிர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.