புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்றும், அதுகுறித்து பேசக்கூடாது என்று பிரதமர் மோடி அப்போது வற்புறுத்தியதாகவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அளித்த நேர்காணலில் அவர் இதை கூறியுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேர்காணலில், 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் மத்திய ரிசர்வ் படை கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காரணம் உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே என்று கூறியுள்ளார்.
அப்போது 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கூறப்படும் கார், ஜம்மு காஷ்மீர் சாலைகள் மற்றும் கிராமங்களில் 10 முதல் 15 நாட்கள் சுற்றித் திரிந்ததாக கூறியுள்ளார்.
இதற்கு உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். சிஆர்பிஎஃப் ஜவான்களை அழைத்துச்செல்ல விமானம் கேட்டது என்றும், ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து சாலை மார்க்கமாக அழைத்து செல்லக்கூறியது என தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு பிறகு இதுகுறித்து, வெளியே யாரிடமும் கூறாமல் அமைதி காக்குமாறு பிரதமர் மோடி வற்புறுத்தியதாகவும், அதே போல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியே சொல்ல வேண்டாம் என கூறியதாகவும் நேர்காணலில் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது பழி சுமத்தி ஆதாயம் தேடுவதே பாஜக அரசின் நோக்கம் என்று தாம் உணர்ந்ததாக சத்யபால் மாலிக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணு வீரர்கள் சென்று கொண்டிருந்த வேன் மீது வெடிமருந்து நிரப்பிய கார் மோதியதில் 40 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.
newstm.in