ஸ்ரீரங்கம்: விண்ணதிர்ந்த ‘ரங்கா’, ‘கோவிந்தா’ கோஷம்! – விமர்சையாக நடைபெற்ற சித்திரைத் தேர்த்திருவிழா!

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுகிற திருத்தலம் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ‘விருப்பன் திருநாள்’ என்று அழைக்கப்படும் சித்திரைத் தேர்த்திருவிழா 10 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா ஏப்ரல் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து தினமும் கருட வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கற்பக விருட்ச வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நம்பெருமாள் திருக்கோயிலைச் சுற்றி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் 8-ம் நாள் மாலை தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அதையடுத்து அதிகாலை 4 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, சித்திரைத் தேர் மண்டபத்துக்கு 4.30 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மீன லக்னத்தில் அதிகாலை 4.45 – 5.30 மணிக்குள் வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு சரியாக காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த் திருவிழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் உலா வர, ‘ரங்கா… கோவிந்தா!’ என்கிற கோஷங்கள் விண்ணதிர்ந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பட்டு வஸ்திரம், கிளிமாலை, பாண்டியன் கொண்டை அணிந்து நம்பெருமாள் வலம் வந்ததை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு ரசித்தனர். கீழச் சித்திரை வீதியிலிருந்து புறப்பட்ட தேர், தெற்குச் சித்திரை வீதி, மேற்குச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி ஆகியவற்றில் வலம் வந்து நிலையை அடைந்தது.

தேரோட்டத்தின் போது தேரின் முன்பு பக்தர்கள் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபட்டனர். தேர்த் திருவிழாவையொட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இன்று (20-ம் தேதி) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றது. நாளை (21-ம் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.