லாரி கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய நபரின் பெயரை தவிர்க்க, லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணி நீக்கம்

திருப்பத்தூர் அருகே லாரி கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய நபரின் பெயரை தவிர்க்க, லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்றாம்பள்ளியில் 2015 ஆம் ஆண்டு லாரி ஒன்று காணாமல் போனது. இதுகுறித்த வழக்கை, ஆய்வாளர் காமராஜ் விசாரித்தார். அந்த வழக்கில் லாரியை, செம்மரம் கடத்துவதற்காக திருடியது தெரிய வந்தது.

இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்பட்ட அணைக்கட்டை சேர்ந்த ராஜசேகரிடம், அவரது பெயரை சேர்க்காமல் தவிர்க்க, ஆய்வாளர் காமராஜ் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதில் 5 லட்சம் ரூபாயை ஏற்கனவே கொடுத்துவிட்ட நிலையில், எஞ்சிய 2 லட்சத்தை பெற்றபோது, காமராஜை, லஞ்ச ஒழிப்புப் போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.

அப்போதே ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மேலும் சம்மந்தப்பட்ட எஸ்.ஐ. சேகர், தலைமைக் காவலர்கள் கார்த்திகேயன், நாசர், அறிவு செல்வம், ரகுராம் ஆகியோர் மீது விசாரணை நடந்து வந்தது.

இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, 6 பேரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.