திருச்சுழி: டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.5 லட்சம் கொள்ளை – சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை!

திருச்சுழி குண்டாறு அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக்கடையில் பள்ளிமடத்தை சேர்ந்த பூமிநாதன், பச்சேரியைச் சேர்ந்த முத்துக்கருப்பன், நார்த்தம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி பனையூரை சேர்ந்த பெருமாள்ராஜ் ஆகியோர் சேல்ஸ்மேன்களாக பணியாற்றி வருகின்றனர். மேற்பார்வையாளர்களாக புளியங்குளத்தை சேர்ந்த செந்தில், பச்சேரியை சேர்ந்த மாரியப்பன் இருவர் பணிபுரிகின்றனர்‌. மொத்தம் ஆறு பணியாள்களைக்கொண்ட இந்தக்கடையில் ரம்ஜான் பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தையொட்டி மதுவிற்பனை ஜோராக நடைபெற்றுள்ளது.

காயம்பட்டவர்கள்

மதுக்கடையில் கூட்டம் அலைமோதியதை நோட்டமிட்ட கொள்ளைக்கும்பல் மதுபானக்கடை விற்பனை முடியும் வரை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர். விற்பனை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது முகமூடி அணிந்துக்கொண்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மதுபானக்கடைக்குள் அதிரடியாக புகுந்து கொள்ளைக்கும்பல் டாஸ்மாக் மதுவிற்பனை பணத்தை பறிக்க முயன்றுள்ளனர்.

இதைத்தடுக்கச் சென்றக்கடை ஊழியர் பூமிநாதனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அந்தச்சமயம், கடையிலிருந்த மற்ற ஊழியர்களையும் பீர்பாட்டில்களை உடைத்து தாக்கிவிட்டு, கடையிலிருந்த விற்பனை பணம் ரூ.5,37,000 பணத்தை பறித்துக்கொண்டு கொள்ளைக்கும்பல் அங்கிருந்து தப்பிஓடியது.

கொள்ளை

இந்த தாக்குதலில் காயமடைந்த மதுக்கடை ஊழியர்கள், திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இந்தச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சுழி போலீஸார், கொள்ளை நடந்த மதுக்கடையில் நேரில் ஆய்வுசெய்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையிலும் கொள்ளைக்கும்பல் குறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள், காயமடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டார். மதுபானக்கடையில் ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே மதுபானக்கடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக, காவலாளியை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை கொள்ளை பறித்துக்கொண்டு ஒரு கும்பல் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.