போலீஸ் அதிகாரிகளுக்கான பிரத்யேக செயலி உருவாக்கம் – விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை: உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க மற்றும் விரைந்து செயல்பட வசதியாக தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கென்று பிரத்யேகமாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

காவல் துறையில் பல அலுவலகங்களில் கோப்புகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதனால், போலீஸ் அதிகாரிகளின் உத்தரவுகள் கீழ்மட்ட அதிகாரிகளுக்குச் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தடுக்கும் வகையில் அனைத்தையும் கணினிமயமாக்க முடிவெடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இ-ஆபீஸ் என்ற மென்பொருள் மூலம் காவல் துறையில் நிர்வாக ரீதியான பெரும்பாலான பணிகள் கணினிமயமாக்கப்பட்டன. இதற்கென தனி பிரிவும் உருவாக்கப்பட்டது. தபால் மூலம் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படுவதோடு, நிர்வாக ரீதியான பணிகள் இ-ஆபீஸ் மென்பொருள் மூலமும் நடைபெற்று வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக தமிழகத்திலுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கென்று பிரத்யேகமாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஜிபி அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: ‘தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய செயலியில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஐபிஎஸ்அதிகாரிகளும் இணைக்கப்பட்டிருப்பார்கள்.

மேலும், எஸ்பி அந்தஸ்து முதல் டிஜிபி வரை முதல்கட்டமாக 208 பேரின் பெயர், விவரம், அவர்களின் பிறந்த தேதி, அவர்கள் பணியாற்றிய இடம், பதவி உயர்வு பெற்ற ஆண்டு, தேதி உட்பட அனைத்து விவரங்களும் புகைப்படத்துடன் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பிரத்யேகமான பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.

பேப்பர் நடைமுறைக்கு முடிவு: அதன்மூலம் அவர்கள் உள்நுழைந்து தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விடுப்பு கோருதல், தேவையான கோரிக்கை உள்ளிட்ட விவரங்கள்குறித்தும் தகவல் பதிவேற்றம் செய்யலாம். சம்பந்தப்பட்ட உயர்அதிகாரிகள் அந்த செயலியிலேயே பதில் அளிப்பார்கள். இதன்மூலம் பேப்பர் நடைமுறைமுடிவுக்கு வரும். உடனுக்குடன்தகவல் பரிமாறப்படுவதாலும், அதன் மீது உடனுக்குடன் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாலும் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதிலும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதிலும் விரைந்து செயல்பட முடியும்.

பல்வேறு சிறப்பம்சங்கள்: உதாரணமாக ஒரு போலீஸ் அதிகாரி விடுப்பு எடுக்கிறார் என்றால் அதுகுறித்து அந்த செயலியில் பதிவிட்டால் போதும். சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பதோடு அந்த இடத்தில் தற்காலிகமாக பொறுப்பு அதிகாரி யார் என்று அவரது பெயரையும் குறிப்பிட்டுவிடுவார். இதை அனைத்து அதிகாரிகளும் தெரிந்து கொண்டுதேவைக்கு ஏற்ப தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இதேபோல் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த செயலியில் உள்ளது.

இந்த செயலி குறித்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் முழுமையாக இந்த செயலி நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.