ரஹானே, துபே அதிரடியில் சென்னை 5-வது வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம்.!

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய 33-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சையில் இறங்கின.

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவான் கான்வேயும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 59 ரன் திரட்டி வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் (7.3 ஓவர்) எடுத்து பிரிவை சந்தித்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வந்த அஜிங்யா ரஹானேவும் மட்டையை சுழற்ற தவறவில்லை. மறுமுனையில் தொடர்ந்து 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்த கான்வே 56 ரன்களில் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

சிக்சர் மழை

இதன் பின்னர் ரஹானேவுடன், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஜோடி போட்டார். இருவரும் சூறாவளியாய் சுழன்றடிக்க ஈடன்கார்டனே அதிர்ந்து போனது. வருண் சக்ரவர்த்தியின் ஒரே ஓவரில் துபே இரு சிக்சர் விரட்ட, உமேஷ் யாதவின் பந்து வீச்சில் ரஹானே 2 சிக்சர், ஒரு பவுண்டரி தெறிக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த ரஹானே 24 பந்திலும், துபே 20 பந்திலும் அரைசதத்தை கடந்தனர். இவர்களின் ருத்ரதாண்டவத்தை கட்டுப்படுத்த வழிதெரியாமல் சில ஓவர்கள் எதிரணி கேப்டன் நிதிஷ் ராணா திக்கித்து போனார்.

ஷிவம் துபே 50 ரன்களில் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். அவருக்கு பிறகு இறங்கிய ஜடேஜா 2 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்த திருப்தியுடன் வெளியேறினார்.

20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ரஹானே 71 ரன்களுடனும் (29 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் டோனி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அத்துடன் நடப்பு தொடரில் பதிவான அதிகபட்சமாகவும் இது அமைந்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரின் (0), ஜெகதீசன் (1 ரன்) இருவரும் 2-வது ஓவருடன் அடங்கினர். வெங்கடேஷ் அய்யர் (20 ரன்), கேப்டன் நிதிஷ் ராணாவும் (27 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை.

சென்னை வெற்றி

இதன் பின்னர் ஜாசன் ராய் (61 ரன், 26 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), ரிங்கு சிங் (53 ரன், 33 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர் ) ஆகியோரது அரைசதங்கள் அந்த அணிக்கு ஆறுதல் அளித்ததே தவிர, வெற்றிக்கு உதவவில்லை. 20 ஓவர்களில் கொல்கத்தா அணியால் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியை பெற்றது. தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரானா, மொயீன் அலி, ஆகாஷ்சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

7-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 3-ல் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவுக்கு 5-வது தோல்வியாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.