திருவாவடுதுறை ஆதீன வரலாற்றை பொய் என்கிறது காங்கிரஸ்: அமித் ஷா

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று கூறுவதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா இன்று (மே 26) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சி இப்போது மற்றுமொரு வெட்கக்கேடான செயலை செய்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் ஒரு புனிதமான சைவ மடம். நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோலின் முக்கியத்துவம் குறித்து திருவாவடுதுறை மடம் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தற்போது திருவாவடுதுறை மடத்தின் வரலாற்றை போலி என்கிறது.

காங்கிரஸ் கட்சி தனது நடத்தை குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவு வெறுக்கிறது? இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனிதமான சைவ மடம் சார்பில் பண்டித நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், அதனை ஒரு ‘வாக்கிங் ஸ்டிக்’ என்று அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென்னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால், ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மவுன்ட்பேட்டன், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் அவ்வாறு விவரித்ததாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது பொய்யானது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக சிலர் கருதி, அது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு, பின்னர் அதனை மோடி ஆதரவாளர்கள் ஊடகங்களில் முழங்கி வருகின்றனர். தமிழகத்தில் அவர்களுக்கு (பாஜகவுக்கு) இருக்கும் அரசியல் நோக்கங்களுக்காக பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் செங்கோல் விவகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப உண்மைகளை திரிக்கிறார்கள்” என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.