சென்னை: ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் பாஜக எம்பிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் எந்தவித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ளார். ஆனால் இவரால் 10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் வீரர்/வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.
பாஜக பிரமுகர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக எம்பி மீதே வெளிப்படையாக பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டை தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீரர்/வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவளிக்க முன்வந்தனர். ஆனால் இந்த போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்ற விரும்பவில்லை என்று வீரர்கள் மறுத்து, அரசியல் கட்சியினரின் ஆதரவை பெறவில்லை. எவ்வித அரசியல் தலைமையும் இல்லை என்றாலும் கூட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இது சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து பேசுபொருளானது. எனவே மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வீரர்களை அழைத்து பிரச்னை குறித்து பேசியது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைக்கப்படுவதாகவும், அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.
மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாகவும் கூறியது. இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தற்போதுவரை பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை. எனவே மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டதை தொடர்ந்தனர்.
இந்த முறை போராட்டத்திற்கு அரசியல் கட்சியினரின் ஆதரவை அவர்கள் நாடினர். மட்டுமல்லாது விவசாயிகளும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து போராட்டம் வலுவடைந்தது. போராட்டம் நேற்று (மே.28) 35வது நாளை எட்டிய நிலையில், புதிய நாடாளுமன்றமும் நேற்று திறக்கப்பட்டது.
இந்த நாடாளுமன்ற வளாகத்தில் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சுமார் 200 மல்யுத்த வீரரகள், இது தவிர அரசியல் கட்சிகளின் இளைஞர் மாணவர் அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் என பலரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போராடத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்துவதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. நேற்று வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று இன்னும் அவர்கள் போராட்டத்தை தொடரவில்லை. இப்படி இருக்கையில், மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரினால் ஜந்தர் மந்தர் பகுதி இதற்காக கொடுக்கப்படாது என்றும், அதற்கு பதிலாக மாற்று இடம் ஒதுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது.
இது மல்யுத்த வீரர்களிடம் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த போராட்டம் தொடங்கிய போது டெல்லி போலீஸில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீரர்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் டெல்லி போலீஸ் இழுத்தடித்து வந்தது. எனவே வீரர்கள் நீதிமன்றத்தை நாடினர். பின்னர்தான் 8 நாட்கள் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டெல்லி போலீஸின் அனுமதி மறுப்பு மற்றும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள வீரர்களின் கோரிக்கைகளை காவல்துறையினர் கேட்காதது, மத்திய அரசு இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருப்பது போன்றவை எதிர்க்கட்சிகளிடையே பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், இடதுசாரிகள் தொடங்கி மாநில கட்சிகள் கூட இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லி காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் செங்கோல் வளைந்துவிட்டது என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “புகார் கூறிய மல்யுத்த வீராங்கனைகள் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. புகார் அளித்தவுடன் கைது செய்யப்பட வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதல்ல என்று கூறினார்.
ஜந்தர் மந்தரில் இதுவரை போராட்டம் நடத்துவதற்கு அனைத்து அனுமதிகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் நேற்று நடைபெற்ற சம்பவத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் பேரணியாக சென்றதால் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.