தமிழகத்தில் இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு: டோக்கியோவில் ‘ஜெட்ரோ’ தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான ஜெட்ரோவின் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், அதிக முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முதலீட்டாளர்களை அவர் சந்தித்து வருகிறார். டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) தலைவர்இஷிகுரோ நொரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.

அப்போது, முதல்வர் பேசியதாவது: இந்தியாவுடன் இணைந்து ஜெட்ரோ மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் வர்த்தக செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முக்கியப் பங்கை ஆற்றி வந்துள்ளது. அதற்கு நன்றி. இதை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆட்டோமொபைல், கனரக பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

‘தொழில் 4.0’ என்பதை நோக்கி தமிழகத்தில் உள்ள அதிக அளவிலான சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களை முன்னேற்ற, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப திறன்களும், ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும். இதுபோன்ற துறைகளில் நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என நம்புகிறேன்.

மேம்பட்ட உற்பத்திக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்கள் ஜப்பானியர்கள். தமிழகத்தில் திறன்மிகுந்த மனிதவளம் உள்ளதால் ‘4.0’ போன்ற தொழில்நுட்ப தேவைகள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மேலும் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும். சென்னையில் 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வர வேண்டும். இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்றார்.

ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ கூறும்போது, ‘‘தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள ஜப்பான் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க தமிழக அரசு அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி. சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.