Ambati Rayudu: ஆறு கோப்பைகள் வெல்ல உறுதுணையாக நின்ற வீரன்; IPL -ன் `Unsung Hero' ராயுடுவின் கதை!

சென்னை மும்பை என ஐபிஎல் தொடரின் இரண்டு பெரிய அணிகளுக்கு கடந்த 13 ஆண்டுகளாக முதுகெலும்பாக திகழ்ந்த ராயுடு இந்தாண்டு இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

மும்பை சார்பில் மூன்று கோப்பைகள் சென்னை சார்பில் மூன்று கோப்பைகள் என மொத்தம் ஆறு முறை ஐபிஎல் கோப்பையை வென்றவர். அத்தோடு இல்லாமல் இவரை எடுத்து இருந்தால் 2019 உலகக்கோப்பையையே இந்தியா வென்றிருக்கும் என்ற ஆதங்கம் இப்போது வரை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனிடமும் உள்ளது. சண்டை, கோபம், வளர்ச்சி, வெற்றி, ஏமாற்றம், ஆதங்கம்‌ என எண்பதுகளில் வெளிவந்த ஏதோ ஒரு ரஜினி படத்தை ஒத்தது ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கை.

Ambati Rayudu

தனது 17வது வயதிலேயே ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் ராயுடு. ரயில்வேஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி சிறு வயதிலேயே இந்தியா-ஏ அணிக்கு தகுதி பெற்றவர். மேலும் தவான், உத்தப்பா, ரெய்னா, தினேஷ் கார்த்திக் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் கேப்டனாக 24 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் ராயுடு. ஆனால் அந்தத் தொடரின் அரையிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ராயுடு வேண்டுமென்றே ஓவர்களை வீசாமல் நேரத்தை வீணடித்ததாக நடுவர்கள் குற்றம் சுமத்த, அரையிறுதி போட்டிக்கு அவர் தடை செய்யப்பட்டார். இந்தியா அப்போட்டியில் தோற்று வெளியேறியது. ராயுடுவின் வருங்கால கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சரியான உதாரணம்.

பிறகும் ரஞ்சி போன்ற தொடர்களில் தொடர்ந்து ஜொலித்தார் ராயுடு. உலகக்கோப்பை தோல்விக்கு பிறகும்‌ அண்டர் 19 உலகக்கோப்பை கேப்டனாகவே தொடர்ந்தார். கென்யா சென்று இந்தியா-ஏ அணிக்காக ஆடினார்.  தன்னுடன் ஆடிய மற்ற வீரர்களான ரெய்னா, இர்ஃபான், தினேஷ் கார்த்திக் போன்றோரெல்லாம் இந்திய அணிக்கு விளையாட சென்று விட்ட விரக்தியில் இந்தியன் கிரிக்கெட் லீக் என்னும் தொடரில் ஆட ஒப்பந்தமானார் ராயுடு. பிசிசிஐ அனுமதிமின்றி தொடங்கப்பட்ட இந்த தொடரில் விளையாடும் அத்தனை வீரர்களும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்த போதும் அதில் ஆட தயாரானார் ராயுடு. 

Ambati Rayudu

இதுகுறித்து அப்போது பேசிய ராயுடு, “பத்து ஆண்டு காலம் இந்திய டொம்ஸ்டிக் கிரிக்கெட் ஆடினாலும் கிடைக்காத பேரும் புகழும் எனக்கு இதன் மூலம் கிடைக்க இருக்கிறது” என்று கூறினார். மேலும் தன்னை தொலைக்காட்சியில் மக்கள் பார்த்து தனது திறமையை மதிப்பிடுவார்கள் என்றும் கூறியிருந்தார் ராயுடு. இத்தொடரில் ஆடியதற்காக கிட்டத்தட்ட 79 வீரர்களை தடை செய்தது பிசிசிஐ. ராயுடு தடை செய்யப்பட்டார். பிசிசிஐயின் ஆதரவு இல்லாத காரணத்தினால் ஐசிஎல் கிரிக்கெட் சில ஆண்டுகளிலேயே நிறுத்திப் போனது. ராயுடு உள்ளிட்ட‌ 79 வீரர்களுக்கும் புது மணி படித்து பிசிசிஐ மீண்டும் அவர்களை உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட அனுமதித்தது.‌ 

ரஞ்சி, இந்தியா-ஏ என்று கீழேயே இருந்த ராயுடுவின் கேரியர்‌ 2010ம் ஆண்டு உயரத் தொடங்கியது. ஐபிஎல் தொடரில் மும்பை அணி ராயுடுவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. மும்பைக்கு ஆடிய முதல் போட்டியிலேயே 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து தனது ரீ-என்ட்ரியை பதிவு செய்தார் ராயுடு. அந்த தொடரில் இரண்டு அரைசதங்கள் உடன் 356 ரன்கள்‌ எடுக்க, மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் தேவை இல்லாமல் ராயுடுவின் பேட்டிங் ஆர்டரை நிர்வாகம் மாற்றியதும் மும்பை தோல்வியுற்றது. தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளும் ராயுடு மும்பை அணிக்காக‌ 300 ரன்களுக்கு மேல் எடுத்தார். இந்த நேரத்தில் தான் முதன் முதலாக இந்திய அணிக்காக தேர்வானார்.

Ambati Rayudu in mumbai indians

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயுடு சரியாக ஆடாத போதும்‌ அவரது திறமையை‌ மனதில் வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது மும்பை அணி.‌ அதற்கான நன்றிக்கடனை இறுதிப்போட்டியில் தீர்த்தார் ராயுடு. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும் மறு பிக்கம் பொறுப்புடன் நின்று 37 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.‌ பொல்லார்ட் உடன் இணைந்து இவர் அமைத்துக் கொடுத்த பார்ட்னர்ஷிப் தான் மும்பைக்கு முதல் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்தது.‌ இந்த ஐபிஎல் வெற்றிக்கு பின்பு தான் முதன் முதலாக இந்தியாவுக்கு ஆடும்‌ வாய்ப்பு ராயுடுக்கு வந்தது. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் போட்டியிலேயே அரை சதம் கடந்து அசத்தினார்.‌

2014ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் போட்டி மும்பை ஆடிய கடைசி லீக் போட்டி. 190 என்ற இமாலய இலக்கை 14.4 ஓவர்களில் எட்டினால் தான் பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்று இருந்த போது கடைசி நேரத்தில் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துக் கொடுத்து மும்பையை அடுத்து சுற்றுக்கு வழிநடத்தினார் ராயுடு. அதே ஆண்டு இந்தியாவுக்காக 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 4 அரைசதம் மற்றும்‌ ஒரு சதம் என அடித்து தனது டி20 ஃபார்மை ஒரு நாள் போட்டிகளிலும் நிரூபித்தார். மீண்டும் 2015ல் கோப்பை வென்ற மும்பை‌ அணியில் இருந்தார் ராயுடு. மேலும் எப்போதெல்லாம் இந்தியாவின் சீனியர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய அணியிலும் அசத்தினார்.

2015 உலகக்கோப்பை

2015 உலகக்கோப்பை முடிந்து அதில் நிலையான‌ நான்காம் இடத்தில் ஆடும் வீரர் இல்லாததால் இந்திய அணி அதை தேடும் பணியில் இறங்கியது. பலரை முயன்று பார்த்து கடைசியில்‌ ராயுடுவிடம் வந்து நின்றது இந்திய அணி. 2018ல் இது நடக்கும் முன்பு ராயுடு மும்பை அணியை விட்டு விலகி சென்னை அணியில் இணைந்திருந்தார் ஐபிஎல் தொடரில்.‌ மிடில் ஆர்டர் வீரராக அறியப்பட்ட ராயுடுவை துவக்க வீரர் ஆக்கியது சென்னை. அந்த தொடரில் தனது மொத்த திறனையும் அவர் வெளிப்படுத்தி, 16 போட்டிகளில்‌ 602 ரன்கள் எடுத்தார். கம்பேக் சீசனில் ராயுடுவின் அதிரடியை பயன்படுத்தி சென்னை கோப்பை வெல்ல, அந்த ஃபார்மை இந்திய‌ அணி பயன்படுத்திக் கொண்டது. 

ராயுடுவும் மிகச்சிறப்பாக தனக்கு கொடுத்த இடத்தில் இந்தியாவுக்காக ஆடினார். கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி என அப்போது ராயுடுவை புகழாத ஆட்களே இல்லை. நீண்ட பிரச்சனையான இந்தியாவின் மிடில் ஆர்டர் சிக்கல்களை எல்லாம் தீர்க்கப்போகும் மீட்பராக ராயுடுவை இந்திய ரசிகர்கள் பார்த்தனர். ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலிய தொடரில் எதிர்பாரா விதமாக ராயுடுவின் ஃபார்ம்‌ அடி வாங்க அதற்கு அடுத்த மாதம்‌ அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை ஸ்குவாடில் ராயுடுவின் பெயர் இல்லை.

Ambati Rayudu

அத்தனை பில்ட் அப்புகள் கொடுத்த ராயுடுவை அணியில் சேர்க்காதது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து கேட்டதற்கு, ராயுடுவுக்கு பதிலாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் பங்காற்றும் 3D வீரரான விஜய் சங்கரை அணியில் எடுத்திருக்கிறோம்‌‌ என கூறியது தேர்வாளர்கள் குழு. விரக்தியடைந்த ராயுடு ட்விட்டர் சென்று, உலகக்கோப்பையைக் காண‌ தான் 3D கண்ணாடிகளை ஆர்டர் செய்திருப்பதாக நக்கலாக ஒரு ட்வீட் போட்டார். அப்போதைய வைரல் செய்தி இது தான். உச்சகட்ட கொடுமை என்னவென்றால், உலக கோப்பைத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது விஜய் சங்கர் காயமடைந்த போதும் ராயுடுவை சேர்க்காமல் மயங்க் அகர்வாலை சேர்த்தார்கள். இதனால் விரக்தி அடைந்த ராயுடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். 

ஆனால் அப்ரிடி பாணியில் சில மாதங்களில் முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும் டொமஸ்டிக் கிரிக்கெட் ஆட வந்தார் ராயுடு. 2020 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயுடுவின் அரைசத உதவியுடன் தான் மும்பையை வீழ்த்தியது சென்னை. 2021ல் பொல்லார்ட் சென்னையை போட்டு புரட்டி எடுத்த ஆட்டத்தில் கூட 27 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து இருந்தார். 2021ல் கோப்பை வென்ற அணியிலும் இருந்தார்.   கடந்த ஆண்டு சென்னை எட்டாவது இடத்தில் முடித்த போது கூட ராயுடு பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார். 

Ambati Rayudu

இந்த ஆண்டு இறுதிப் போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக ட்விட்டரில் அறிவித்தார் ராயுடு. மேலும் இந்த முறை முடிவை மாற்றப் போவதில்லை என்றும் தீர்க்கமாக சொல்லிவிட்டார். வாழ்நாள் முழுவதும் தன் திறமைக்கான அங்கீகாரமே கிடைக்காத ராயுடு, நேற்றைய இறுதி போட்டியிலும் அதே நிலையில் தான் இருந்தார்.

IPL CUP

முக்கியமான நேரத்தில் உள்ளே வந்து எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ஆட்டத்தையும் வென்று சென்னை அணிக்கு ஐந்தாவது கோப்பையை பெற்றுக் கொடுத்தார் ராயுடு. ஆனால் இணைய சமூகமோ, ஜடேஜாவை பாராட்டி வருகிறது தவிர ராயுடுவை கண்டு கொள்ளவில்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் கடைசி வரை, தனக்கான அங்கீகாரத்தைப் பெறாத வீரராகவே ஓய்வு பெறுகிறார் ராயுடு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.