பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்கள் – 10 ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சி என மார்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை

புதுடெல்லி: உலக அளவில் வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2014-ல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 10 குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று அமெரிக்காவின் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று கடந்த 26-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ‘இந்தியா ஈக்விட்டி ஸ்ட்ரேட்டஜி அன்ட் எக்கனாமிக்ஸ்: 10 ஆண்டில் இந்தியா எப்படி மாற்றம் அடைந்தது’ என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு (இந்தியா) தலைவர் ரிதம் தேசாய் தலைமையிலான குழுவினர் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2013-ம் ஆண்டில் இருந்த நிலையில் இருந்து இந்தியா இப்போது பல வகைகளில் மாற்றம் அடைந்துள்ளது. உலக அளவில் வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 10 குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான அடிப்படை வரி பிற நாடுகளுக்கு நிகராக மாற்றி அமைக்கப்பட்டது. இது இப்போது 25 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. இதுவே புதிய நிறுவனங்களுக்கான வரி 15% ஆக உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள், பிராட்பேண்ட் இணையதள இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ரயில் பாதை மின்மயம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது

மத்திய, மாநில அரசுகள் 12-க்கும் மேற்பட்ட இனங்களில் தனித்தனியாக வரி விதித்து வந்ததை மாற்றி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்ற ஒரே வரிநடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

யுபிஐ வழியிலான டிஜிட்டல்பணப் பரிமாற்றம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ரொக்கபணப் பரிமாற்றம் குறைந்து, முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களது வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதுபோல திவால் சட்டம், பணவீக்க கட்டுப்பாடு, அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தல், ரியல் எஸ்டேட் துறைக்கு தனி சட்டம், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க கொள்கை அளவில்மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் காலத்தில் ஆசியா மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தியாவில் இப்போது சராசரி தனிநபர் ஆண்டு வருவாய் 2,200 டாலராக உள்ளது. இது 2032-ம் ஆண்டு வாக்கில் 5,200 டாலராக அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜிடிபி 7.2% வளர்ச்சி: 2022-23 நிதியாண்டின், அக்டோபர் – டிசம்பர் வரையிலான 3-ம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்த நிலையில் ஜனவரி – மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் வளர்ச்சி 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல, 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி 7.2 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி 2022-23 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.1 சதவீதமாகவும் ஒட்டுமொத்த நிதி ஆண்டு ஜிடிபி 7 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்ததைவிடவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.