காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: இந்த வெட்டுக்குத்துக்கெல்லாம் முட்டுச்சந்தே இல்லையா முத்தையா?

`மண்ணுக்கும் பெண்ணுக்கும் அடித்துக் கொண்டுதான் பல இனக்குழுக்கள் அழிந்திருக்கின்றன. இந்தக் கதை ஒருபெண்ணுக்காக அடித்துக் கொண்ட கதை’ என படத்தின் துவக்கத்திலேயே வாய்ஸ்-ஓவரில் தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குநர் முத்தையா!

அவர் படங்களில் வந்த அதே கிராமத்து மோட்டா இளைஞன், வெறிபிடித்து அலையும் வில்லன்கள் என பழகிய ரூட்டில் ஆர்யாவையும் வேட்டியைக் கழட்டி ஓடவிட்டிருக்கிறார்.

விகடன் விமர்சனம்

கதை..? கதாநாயகி தமிழ்ச்செல்வியை (சித்தி இத்னானியை) அவரது இரண்டு முறைமாமன்களும் சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு மறுத்த நாயகியை ஊரை விட்டு விலக்கி வைக்கிறார்கள். நாயகி தனது மூன்று அண்ணன் மகள்களுடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வருகிறார். இந்த ரணகளத்தில் ஜெயிலில் இருக்கும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்தை (ஆர்யாவை) நேரில் சந்திக்கச்செல்கிறார். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் போகிறது. இதனை அறிந்து கொள்ளும் காதர் பாட்ஷா தன்னைத் தேடி வந்த பெண் யாரென்று அறிய அவளது ஊருக்கே செல்கிறார்.

விகடன் விமர்சனம்

அங்கு செல்வியின் முறைமாமன்களுக்கும் காதருக்கும் மோதல் வெடிக்கிறது. செல்வி காதரை ஏன் தேடிச் செல்கிறாள்? காதருக்கும் செல்விக்கும் என்ன சம்பந்தம்? தாயார் உயிருடன் இருக்கும் போது அவரது அண்ணன் மகள்கள் ஏன் செல்வியிடம் வளர்க்கிறார்கள்? எல்லாவற்றுக்கும் மேல் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற பெயர் நாயகனுக்கு எப்படி வந்தது  என பல கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவே பல கிளைக்கதைகள் மூலம் நம்மை டயர்டாக்கி விடை சொல்வதுதான்  ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் கதை.

காதர்பாட்ஷாவாக நடித்துள்ள ஆர்யா,  சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும் கிராமத்து இளைஞராக, வேட்டி இடுப்பில் நிற்காத முத்தையாவின் கிராமத்து இளைஞராக  ந(அ)டித்துள்ளார். வெறித்தனமாக சண்டைக் காட்சிகளில் காட்டும் வீரியத்தை வசன உச்சரிப்பில் சிறிதேனும் காட்டியிருக்கலாம். கொஞ்சமே வரும் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் உணர்ச்சிகளைக்  கடத்துவதில் திணறுகிறார். தைரியமாக எதிரிகளை எதிர்கொள்வது, அண்ணன் மகள்களுக்காக உருகுவது என தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்றவகையில் நடித்திருக்கிறார் நாயகி சித்தி இத்னானி.

விகடன் விமர்சனம்

மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன் என வில்லன்களுக்கு அடிஷினல் சீட் வாங்கி கால் சீட் வாங்கிய முத்தையா, அவர்களை ஆர்யாவிடம் அடிவாங்க மட்டுமே பயன்படுத்தியுள்ளார் என்பது சோகமே. இதில் சிகரெட்டில் வெடிகுண்டை பற்ற வைத்து கொலை செய்யும் காட்சிகளில் தமிழ் மட்டும் சற்று பயமுறுத்துகிறார்.

விகடன் விமர்சனம்

இஸ்லாமிய பின்னணியில் நடித்துள்ள பிரபு உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தன் பங்கினை சிறப்பாகச் செய்துள்ளார். பாக்யராஜ் சிறப்புத்  தோற்றத்தில் ஒரு சில காட்சிகள் வந்து போகிறார். காமெடிக்கு என ஒரு காட்சிக்கு வரும் விக்னேஷ் காந்தின் நடிப்பு ‘உச்’ கொட்ட வைக்கிறது. சிங்கம்புலி வழக்கம் போல சிரிக்க வைக்கத் தவறுகிறார். பிரபுவின் மகளாக வரும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் சிறப்பாக நடித்துள்ளார்.

‘ஒரு வசன காட்சி, புழுதி பறக்கும் சண்டை காட்சி , ஒரு பாட்டு, மீண்டும் புழுதி பறக்கும் சண்டை காட்சி, ஒரு வசனக் காட்சி … ’ என `வந்தான்… சுட்டான்.. ரிப்பீட்’ மோடில் நகரும் முதல் பாதியில், ஒருமணி நேரத்தில் 45 நிமிடங்கள் சண்டை காட்சிகளிலே நகர்கிறது. மொத்தம் ஒன்பது ஆக்‌ஷன் ப்ளாக் என்கிறார்கள். இதில் திரைக்கதை என்று எதை சொல்வது என்றே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் அதுவரை நாயகியின் பின்னால் நகர்ந்த கதைக்களம் நாயகன் பக்கம் மாறுகிறது.

விகடன் விமர்சனம்

இதில் ராமநாதபுரம் இந்து-இஸ்லாமிய வாழ்வியலை காட்டிய விதம் புதுமையாக இருந்தாலும், கதைக்கும் அதற்குமான அழுத்தமான காட்சிகள் கிடையாது. ஒருகதை அதற்குள் விரியும் மற்றொரு கதை, மீண்டும் அதில் இருந்து ஒரு கிளைக்கதை என நகரும் இரண்டாம் பாதி நம்மை டயர்டாக்குகிறது.

சண்டையில் ஆரம்பிக்கும் படம் சண்டையிலேயே முடிகிறது. படத்தின் நீண்ட பாரத்தை தனியாக தூக்கி சுமந்துள்ள ‘ஸ்டண்ட் மாஸ்ட்டர்’ அனல் அரசு தன்னால் முடிந்தவரை ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கும் வித்தியாசம் காட்ட முயற்சித்துள்ளார். அடியாட்களுக்கு டபுள் பேட்டா தாரளமாகக் கொடுக்கலாம். ஆர்யாவின் அடிக்கு பல வடிவங்களில் மடங்கி விழுகிறார்கள். கிராமத்துப் படங்கள் என்றாலே புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கும் டெம்ளேட்டில், இந்தப்படமும் தப்பவில்லை, இதில் ஒரு லோடு மண்ணோடு ஜல்லியையும் சேர்த்திருக்கிறார்கள்.

விகடன் விமர்சனம்

ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டலாக இருக்கும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறது. கிராமத்தின் வெக்கையை சிறப்பாக காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இம்முறையும் அதை செவ்வனே செய்துள்ளார். சண்டை காட்சிகளை தொகுத்த விதத்தில் படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் கவனம் பெற்றாலும் இரண்டாம் பாதியில் கதைக்குள் கதை என விரியும் காட்சி அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இந்து-இஸ்லாமிய ஒற்றுமையை பேசும் வசனங்கள்  பாராட்டக்குரியது, ஆனால் அதற்குள்ளும் குறிப்பிட்ட சமூகத்தை மையப்படுத்தி பேசி இருப்பது சரியான அணுகுமுறை அல்ல. “தனித்தனியா நின்னா தண்ணி தான் காட்டுவாய்ங்க, கூடி நின்னா தான் அடுத்தவன் கொலையறுக்க முடியும்”, “கர்வம்,கௌரவம் தான் முதல்ல அதுக்கு அப்புறம் தான் எல்லாம்” என படத்தில் வரும் பெரும்பாலான எதிர்மறை வசனங்கள் பெண் கதாபாத்திரத்தை வைத்தே பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது.

விகடன் விமர்சனம்

படத்தின் பல கேரக்டர்கள் சாதிய மனோபாவத்தில்தான் சுற்றி அலைகின்றன. பெண் சிசுக்கொலை, விவாகரத்து வாங்க நீதிமன்றம் செல்லாமல் ஊர் பஞ்சாயத்தில் நிற்பது என முத்தையா கட்டமைத்திருக்கும் கிராமம் இப்போதும் இருக்கிறதா என்ன..? ஊர் சபைகூடும்  இடத்தில் ஒருவர்கூடவா படித்திருக்க மாட்டார்கள்? 30 ஆண்டுகளுக்கு முன் நம்மை இழுத்துச் சென்று காட்டியிருக்கிறார்கள்.

இப்படி பிற்போக்கான சிந்தனைகள் படமெங்கும் நிறைந்திருந்தாலும் முந்தைய படங்களில் திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருப்பார் முத்தையா.

விகடன் விமர்சனம்

குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களை திரைக்கதையோடு ஒன்றச் செய்திருக்கும். ஆனால் இந்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ அதைக்கூட செய்யத் தவறிவிட்டது என்பதே உண்மை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.