Maniratnam: ‘உங்கப்பன்கிட்ட சொல்லி ஒரு சான்ஸ் வாங்கிக் குடுடா’ – சிவாஜி கேட்ட எமோஷனல் தருணம்

இன்று ஜூன் 2. இயக்குநர் மணிரத்னம் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் உற்சாகமாக இருக்கிறார். தலைமுறைகள் கடந்து இன்றும் புது இயக்குநர்களுக்கு பேட்டியாகக் களத்தில் நிற்கும் மணிரத்னம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள்!

* நிஜப்பெயர் சுப்பிரமணியன். சினிமாவிற்காக மணிரத்னம். யாரிடமும் உதவியாளராக இருந்தவரில்லை. அவரது மானசீக குரு என்றால் அது அகிரா குரோசோவா. தான் இயக்குநர் ஆவதற்கு முன்னர் படத்தயாரிப்பு மற்றும் பட விநியோகத் துறையில் இருந்திருக்கிறார். இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர், சிவாஜி, நாகேஷ் இவர்களின் படங்கள் பார்த்துதான் இயக்குநராக விரும்பினார்.

* இவரது படங்களில் ரயில் சீக்குவென்ஸ்கள், மழை, கண்ணாடி முன்னாடி நின்று பேசும் காட்சிகள், சில்அவுட் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும். அதை தனது ட்ரேட் மார்க்காக ஒவ்வொரு படங்களிலும் கடைபிடிக்கிறார்.

மணிரத்னம், மனைவி சுஹாசினியுடன்!

* தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அதன் பின் கோல்ஃப் மைதானம் செல்வார். காலை 7 மணி வரை கோல்ஃப் விளையாடுவது வழக்கம். கோடை காலங்களில் கொடைக்கானலில் உள்ள பண்ணை வீட்டில் ரிலாக்ஸ் ஆகப் பிடிக்கும்.

* ஒரு ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்று. நடிகர் திலகம் மரணப்படுக்கையில் இருந்தபோது அதே மருத்துவமனையில் பக்கத்து அறை ஒன்றில் ஹார்ட் அட்டாக் வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் மணிரத்னம். அப்போது நடிகர் திலகம் மணிரத்னம் மகன் நந்தனைக் கூப்பிட்டு . ‘உங்கப்பன்கிட்ட சொல்லி எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக் குடுடா’என கேட்டிருக்கிறார். இதற்கு அடுத்த நாளில் சிவாஜி நம்மோடு இல்லை. இதைப் பற்றி மணிரத்னம் மனம் திறந்ததும் உண்டு. ”எனக்கு சினிமா மேல ஆசை வந்ததுக்கு மிக முக்கியமான காரணம், சிவாஜி சார் படங்கள்தான். சிவாஜியை வைத்து படம் பண்ணணும் என்பதில் எல்லா டைரக்டர்களுக்கும் ஆசை இருக்கும். அது ஒரு கனவு மாதிரி! ஆனா, அவ்ளோ பெரிய கலைஞனுக்குத் தீனி போடுற மாதிரி கதையோ, கேரக்டரோ அப்போ என்னிடம் இல்லை. இது இல்லைன்னா அடுத்த படம்னு நம்பிட்டிருந்தேன். சிவாஜி சார் இன்னும் ரொம்ப காலம் நம்மோட இருப்பார்னு நம்பினேன். அந்த முற்றுப்புள்ளியை நான் எதிர்பார்க்கலை!” என்கிறார்.

மணிரத்னம்

* தனிமை விரும்பியான மணிரத்னம், புத்தகங்களின் காதலர், நல்ல படங்களை தேடித் தேடி பார்த்து ரசிப்பார், சிறந்த ஓவியரும் கூட! ஏராளமான டிஜிட்டல் பெயிண்டிங்குகள் வரைவதிலும் ஸ்பெஷலிஸ்ட் அவர்.

* மாதவன், ஏ.ஆர்.ரஹ்மான், அரவிந்த்சாமி, மதுபாலா, ‘நிரோஷா’, கௌதம் கார்த்திக், ராதாவின் மகள் துளசி என பலரையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். மணியின் உதவியாளர்களில் நடிகரானவர்களில் கார்த்தி, சித்தார்த், அழகம் பெருமாள் குறிப்பிடத்தக்கவர்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.