அரசு பள்ளி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கும் ஆசிரியர்! புடிச்சு உள்ள போடுங்க அவர்களை – பாஜக தரப்பில் கடும் கண்டனம்!

திருச்சி : அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதற்கு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் 500 லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற நான்கு மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதற்கு ரூபாய் 500 அல்லது இரண்டு எ-4 பேப்பர் கட்டுகள் லஞ்சம் கேட்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றம், வன்மையாக கண்டிக்கத்தக்கது.

“ஒவ்வொரு மார்க் ஷீட்டுக்கும் 500 ரூபாய் காசு கொடு, மேடம், சுப்புலக்ஷ்மி மேடம், இந்த நாலு எருமைமாடுகளையும் வெளியே விரட்டி விடுங்க, இவங்க ஐடிஐயும் படிக்க வேண்டாம், மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம், போடா” என்கிறார். 

மாணவர்கள், “காசு இல்ல டீச்சர்” என்று சொல்ல,  அந்த சுப்புலக்ஷ்மியோ காசு இல்லயா? உள்ள மார்க்க அப்படியே போட்டு குடுத்துருவா? 10, 17? என்று கேட்கிறார்.

அவன் ஐ டி ஐ காரன் மண்ணாங்கட்டி, நாம் அவனுக்கு இளைச்சவன் கிடையாது என்று தலைமை ஆசிரியர் சொல்ல, “சார் காசு இல்ல” என்று மாணவர்கள் மீண்டும் சொல்ல, “டேய், நீங்க அதெல்லாம் சொல்லாதிங்கடா டேய்” என்கிறார் தலைமை ஆசிரியர். கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர் லஞ்சம் கேட்டால் அடுத்த தலை முறை எப்படி தலை நிமிரும்?

தன் தலையை அடகு வைத்தாவது கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் எதையாவது அடகு வைத்தாவது பணத்தை கொண்டு வா என வற்புறுத்துவது களவாணித்தனம் அல்லவா?

மாணவர்களை ‘எருமை மாடு’ என அழைக்கும் அளவிற்கு தகுதி  இல்லாத, தரம் கெட்ட ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் அமர்த்தியது யார்?

10,17 மார்க்குகளுக்கு பதில், காசு கொடுத்தால் தகுதி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கிறேன் என்று சொல்வது தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம், கல்வி தரம் போன்றவற்றை தெளிவாக்குகிறது.

மாதந்தோறும்  பல ஆயிரம் அள்ளிக்கொடுக்கும் ஆசிரியர் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் அஞ்சுக்கும், பத்துக்கும் மாணவர்களை கெஞ்சி பிழைக்கும் நிலை ஏன்? எங்கு கோளாறு? அஞ்சு, பத்து கொடுத்து அந்த ஆசிரியர் வேலையை பெற்றதாலா?

கல்வித் துறையில் தலை விரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலினால் தான் இந்த இழி நிலை என்பதிலோ, இது தான் திராவிட மாடல் என்பதிலோ எள்ளளவும் சந்தேகமில்லை. மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து நீக்க வேண்டும். 

அவர்களை கைது செய்து சிறையிலடைத்தால் தான் அடுத்த தலை முறை உழைத்து பிழைக்க வேண்டும் என்ற சிந்தனையை, நம்பிக்கையை பெற முடியும். இல்லையேல், அடுத்த தலைமுறையும் லஞ்சம், ஊழலில் மூழ்கி அழியும்” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.