கோபம் + சோகம்.. ஒடிசாவில் ஸ்பாட்டில் நின்று மோடி சொன்ன வார்த்தை.. அலறும் ரயில்வே!

புவனேஸ்வர்:
ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உட்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளான ஸ்பாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்ட அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கோபத்துடனும், கடுமையான குரலிலும் பேசினார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. பஹனபஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

தற்போது வரை 280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து நடந்த பஹனபஜார் பகுதிக்கு மோடி இன்று மாலை சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது அவரது முகம் சோகமாகவும், இறுக்கமாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது. அவரிடம் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், விபத்து நடந்தது எப்படி, எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், காயமடைந்தவர்களின் நிலைமை ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, விபத்தில் காயமடைந்தவர்களை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று மோடி பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து மோடி கூறியதாவது:

ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க மத்திய அரசு உதவும். ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்த ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்துக்கு பின்னால் இருக்கும் உண்மை கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நிகழ்ந்த மார்க்கங்களில் ரயில் போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என மோடி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.