ஒடிசா ரயில் விபத்தில் உண்மையான பலி எவ்வளவு? உடல்கள் 2 முறை எண்ணப்பட்டதால் தவறு.. தலைமை செயலர் தகவல்!

புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநில தலைமை செயலர் பிரதீப் ஜெனா. சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜூன் 2 பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணியளவில் ஒடிசாவின் பாலசோர் – பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது. இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகளை துளைத்து 3வது பெட்டியின் மீது பயணிகள் ரயிலின் என்ஜின் ஏறியது. மோதிய வேகத்தில், கோரமண்டல் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு, 3-வது தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன. அப்போது பெங்களூரில் இருந்து ஹவுரா செல்லும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்திசையில் அதே பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பெங்களூர் – ஹவுரா ரயில் பயங்கரமாக மோதி தடம் புரண்டது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள், பெங்களூர் – ஹவுரா ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன. 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பல உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த நிலையில் உடல்களை அடையாளம் காண பயணிகளின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 288 இல்லை, 275 தான். சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று தவறான எண்ணிக்கை பதிவாகியுள்ளது என ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Odisha train accident death toll is 275 not 288 : Chief secretary pradeep jena

ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழக்கவில்லை. 275 பேர் உயிரிழந்துள்ளனர். சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று தவறான எண்ணிக்கை பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் விபத்தில் பலியான 275 பேரில் 88 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்த 1,175 பேரில் 793 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்றும் ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில தடய அறிவியல் ஆய்வகம் மார்ச்சுவரியில் உள்ள ரயில் விபத்தில் பலியான அனைத்து நபர்களின் உடல்களின் டிஎன்ஏ சோதனையையும் நடத்தி வருகிறது என்று ஒடிசா தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா கூறியுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.