ஒடிசா ரயில் விபத்து | பலி எண்ணிக்கை 288 அல்ல 275: தலைமைச் செயலாளர் விளக்கம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்பு பலி எண்ணிக்கை 288 என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 275 என்று திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா கூறுகையில், “நேற்று ரயில்வே துறை பலி எண்ணிக்கை 288 என்று கூறியது. நாங்களும் அதையே பகிர்ந்தோம். இப்போது கணக்கு செய்யப்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 275 என்பது உறுதியாகியுள்ளது. முன்பு ஒரே சடலம் பலமுறை எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போது மாவட்ட ஆட்சியர் குழு ஒவ்வொரு சடலமாக பரிசோதனை செய்தது. அதனையடுத்து இறப்பு எண்ணிக்கை உறுதியாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275” என்று கூறினார்.

88 சடலங்கள் அடையாளம் தெரிந்தது: மேலும் அவர் கூறுகையில், “275 சடலங்களில் 88 சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 78 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மேலும் 10 சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

170 சடலங்கள் புவனேஸ்வரில் உள்ள சவக்கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. எய்ம்ஸ் மருத்துவமனை, கேப்பிடல் ஹாஸ்பிடல், எஸ்யுஎம், கிம், ஏஎம்ஆர்ஐ போன்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 1175 பேர் காயங்களுக்கு மேல் சிகிச்சை பெற வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்றவர்களில் 793 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி 382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்னும் அடையாளம் காணப்படாத சடலங்களின் புகைப்படங்களை வைத்துள்ளோம். ஸ்பெஷல் ரிலீஃப் கமிஷனர், ஒடிசா ஸ்டேட் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி மற்றும் புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் இணையதளங்களிலும் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.