பிஹார் | கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது

பாகல்பூர்: பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த காட்சியை உள்ளூர் மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். தற்போது சமூக வலைதளத்தில் அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஞாயிறு (ஜூன் 4) அன்று மாலை 6 மணி அளவில் இது நடந்துள்ளது.

சுமார் 1,717 கோடி ரூபாய் செலவில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அகுவானி சுல்தான்கஞ்சில் கங்கை பாலம் என இது அறியப்படுகிறது. இதுவரை இந்த பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலம் சூறாவளி காற்றில் சேதமடைந்ததாக தகவல். அதே போல இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்ததாகவும் தகவல்.

“கடந்த 2015 இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். 2020-ல் கட்டுமான பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும். இரண்டாவது முறையாக பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு முதல் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று நாட்டுக்கே முன் உதாரணமாக பதவி விலக வேண்டும்” என பாஜகவின் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

“அனைத்திற்கும் கமிஷன் கேட்டால் இப்படித்தான் நடக்கும். நிர்வாக ரீதியான அராஜகம் மற்றும் ஊழல் மனநிலை கொண்ட ஆட்சியாளர்களின் இயலாபி இது காட்டுகிறது. மாநிலத்தின் சிஸ்டம் சீர்குலைத்து போயுள்ளது. ஆனால், அவர்களோ எதிர்க்கட்சியினர் ஓரணியில் நிற்பது குறித்து பேசுகிறார்கள்” என நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசை சாடியுள்ளார் பிஹார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜய் குமார் சின்ஹா.

பிஹாரில் கடந்த காலங்களிலும் இது போல பாலம் இடிந்து விழுந்த சம்பவமும் நடந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.