Tiruppur | ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி நூதன போராட்டம் –  33 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட, 4 பெண்கள் உட்பட 33 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட கனிமவளத் துறை இணை இயக்குநராக பணியாற்றி வரக்கூடிய வள்ளல், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்ற ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சர் தலைமையிலான ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை என முன்னாள் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் அவரை பணியில் இருந்து விடுவிடுத்து உத்தரவிட்டார். இதனையொட்டி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், ஆட்சியரின் பணியில் இருந்து விடுவிப்பு செல்லாது என மீண்டும் திருப்பூர் மாவட்ட கனிமவளத் துறை இணை இயக்குநராக வள்ளலை நியமித்து கனிமவளத் துறை இயக்குநர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி, திருப்பூர் மாவட்டத்தில் கனிமவளத் துறையில் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாகவும், கனிமவளத் துறை இயக்குநர் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவதாக நூதன போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இன்று நடத்துவதாக அறிவித்தது.

அதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன்முருகசாமி தலைமையில் பாராட்டு விழா நடத்த விவசாயிகள் ஒன்று திரண்டனர். தமிழக சுற்றுச்சூழல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகிலன் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், அங்கிருந்த திருப்பூர் தெற்கு மற்றும் வீரபாண்டி போலீஸார் இந்த நிகழ்வுக்கு அனுமதி இல்லை என கூறி, அவர்களை கலைந்து போக சொல்லினர். ஆனால் அவர்கள் கலைய மறுத்ததை தொடர்ந்து, போலீஸார் 4 பெண்கள் உட்பட 33 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தை ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.