ஒடிசா ரயில் விபத்தில் உண்மை வெளிவந்தாக வேண்டும்: மம்தா பானர்ஜி

கட்டாக்: ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவந்தாக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பலர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

மம்தா பானர்ஜி பேட்டி: கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் விபத்து நேரிட்ட நிலையில், மறுநாள் சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்து குறித்து விசாரித்து அறிந்தார். இந்நிலையில், ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவர் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “உயிரிழந்தவர்களில் 103 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 97 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் குறித்த தகவல் இல்லை. இந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிவந்தாக வேண்டும்” என தெரிவித்தார்.

சுவேந்து அதிகாரி சந்தேகம்: இதனிடையே, ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் திரிணாமூல் காங்கிரஸ் பதற்றத்தில் உள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் இருவர் பேசிய தொலைபேசி உரையாடலை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது. அந்த தொலைபேசி உரையாடல் எப்படி அவருக்குக் கிடைத்தது. ரயில்வே துறை நிச்சயம் இதனை கசியவிட்டிருக்காது.

கொல்கத்தாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சிலர்தான் இந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்திருக்கிறார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன். இந்த தொலைபேசி உரையாடல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறதா என்பதை இன்னும் 2 நாட்கள் வரை பொறுத்திருந்து பார்ப்பேன். விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாவிட்டால் நானே சிபிஐ விசாரணை அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து விசாரிக்குமாறு கோருவேன். அப்படியும் விசாரிக்காவிட்டால் நீதிமன்றத்தில் முறையிடுவேன்.

ரயில் விபத்து குறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றதில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. இத்தனைக்கும் இந்த விபத்து மேற்கு வங்கத்தில் நிகழவில்லை” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.