ஒடிசா ரயில் விபத்து; பலி எண்ணிக்கை இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒடிசா மாநிலம் பஹானாகா பஜார் ரயில்நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது மோதி சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் கிடந்ததால் அந்த பாதையில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இதுவரை 300 பேர் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், பாலாசோர் ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழப்பு என்பதே இறுதி எண்ணிக்கை என்று ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்ளை சந்தித்து அவர் பேசுகையில்; ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பல்வேறு கணக்குப்படி வெளியாகிறது. பாலசோர் மாவட்ட நிர்வாகம் அதனை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது.

அதன்படி, பிற மருத்துவமனைகள், பிணவறைகள் ஆகியவற்றில் இருந்து தரவுகள் எடுக்கப்பட்டு கணக்கிடப்பட்டு இறந்தவர்கள் எண்னிக்கை 288 என்பதே இறுதி. மொத்தம், 205 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 193 உடல்கள் புவனேஸ்வருக்கு கொண்டு வரப்பட்டன, 94 உடல்கள் அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவைச் சேர்ந்த 39 பேர் விபத்தில் இறந்துள்ளார். மாநில அரசு அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடாக 1.95 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது என்றார்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே வெளியான விசாரணையில் தவறான சிக்னல் காரணமாக விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடப்பதற்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மெயின் பாதையில் ரெட் சிக்னல் போட்டதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் பாதையில் திரும்பியுள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது மோதி ரயில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்துக்கான முழு பின்னணியை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.