சூறைக்காற்றுடன் கனமழை.. சென்னையை சூளும் கருமேகங்கள்.. இன்னைக்கு சம்பவம் இருக்கு!

சென்னை:
சென்னையில் இன்று காலை முதல் வெயில் அடித்து நொறுங்கி வந்த நிலையில், சட்டென வானிலை மாறத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான முக்கியமான அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் உக்கிரம் காட்டி வருகிறது. முன்பெல்லாம் மே முடிந்தாலே வெயிலின் தாக்கம் குறைந்துவிடும். ஆனால், இப்போது ஜூன் முதல் வாரத்தை தாண்டியும் கூட கத்தரி 2.0 போல உச்சியை பிளந்து வருகிறது வெயில். காலை 8 மணிக்கே 12 மணியை போல அனல் வீசுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெயிலில் இருந்து விமோச்சனம் கிடைத்து விடாதா என தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருந்த சூழலில்தான், நேற்று சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடைமழை வெளுத்து வாங்கியது. ஆனால், இன்றோ மழை பெய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாத அளவுக்கு மீண்டும் வெயில் மண்டையை பிளந்து வந்தது. இந்த சூழலில், தற்போது சென்னையில் சட்டென வானிலை மாறத் தொடங்கியுள்ளது.

வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அயனாவரம், மயிலாப்பூர், கீழ்பாக்கம், வேப்பேரி, அம்பத்தூர், அண்ணாநகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் புயல் காற்றை போல சூறைக்காற்று வீசி வருகிறது.

வடபழனி, வளசரவாக்கம், தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிற நிலைமையில் இருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் கூறியிருக்கிறார். அவரது பதிவில், “பயங்கர வெப்பமும், கடல் காற்றும் இணைந்து சென்னையில் பல பகுதிகளில் சூறைக்காற்றை உருவாக்கியுள்ளது. அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அண்ணாநகர், மேற்கு பெரம்பூர் ஆகிய இடங்களில் பயங்கர காற்று வீசுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் மழை கொட்ட போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.