உடல்நலக்குறைவு; நெருக்கிய கடன்… பெற்றோருடன் விபரீத முடிவெடுத்த நபர் – திருச்செங்கோடு அருகே சோகம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருக்கும் வையப்பமலை அருகேயுள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது: 36). கூலித்தொழிலாளியான இவர், திருமணமாகாத நிலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வந்தார். அவரின் தந்தை நடேசன், தாயார் சிந்தாமணி ஆகியோருடன் அவர் வசித்து வந்தார். நந்தகுமாரின் தந்தை நடேசனுக்கு கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். இதனால், நந்தகுமார் தச்சுத் தொழில் செய்து பெற்றோரின் மருத்துவச் செலவையும், உணவு தேவைகளையும் கவனித்து வந்தார். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கும் கையில் அடிபட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட நடேசன்

இதனால், வருமானத்துக்கு வழியின்றி தவித்த அவர்கள் குடும்பம், வறுமையின் காரணமாக செலவுகளைச் சமாளிக்க அக்கம் பக்கத்தில் கடன் பெற்றிருக்கின்றனர். இதேபோல், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லோன் வாங்கியிருக்கின்றனர். இவ்வாறு பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், மனம் உடைந்த மூன்று பேரும் ஒரே வீட்டுக்குள் தனித்தனியாக தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். காலையில் நீண்ட நேரமாகியும் யாரும் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அவர்களின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மூவரும் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக, இந்த சோகச் சம்பவம் குறித்து எலச்சிப்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து, தற்கொலை செய்துகொண்ட மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றி ஆய்வுசெய்தனர். அப்போது, தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும், கடன் வாங்கிய நிலையில் அதனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல், தங்களின் இளைய மகன் புதைக்கப்பட்ட இடத்தில், தங்கள் மூன்று பேரின் உடல்களையும் புதைக்க வேண்டும் என, நடேசன் எழுதிவைத்துவிட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

தற்கொலை செய்துகொண்ட நந்தகுமார்

இறந்துபோன நடேசன், சிந்தாமணிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். இறந்துபோன நந்தகுமார் இவர்களுக்கு மூத்த மகன். இரண்டாவது மகனான ஜெயபிரகாஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார். இதேபோல், இவர்களின் ஒரே மகள் 15 வருடங்களுக்கு முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். கடைசி மகன் கோபி என்பவர் மட்டும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எலச்சிபாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.